மத்திய அமைச்சர் எச்.என்.அனந்த்குமார் மறைவு: அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மத்திய ரசாயனத் துறை அமைச்சர் எச்.என்.அனந்த்குமார், சிகிச்சை பலனளிக்காமல் திங்கள்கிழமை மரணமடைந்தார்.
மத்திய அமைச்சர் எச்.என்.அனந்த்குமார் மறைவு: அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மத்திய ரசாயனத் துறை அமைச்சர் எச்.என்.அனந்த்குமார், சிகிச்சை பலனளிக்காமல் திங்கள்கிழமை மரணமடைந்தார்.
 அனந்த்குமாரின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, அனைத்துக் கட்சி தலைவர்கள், பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் செவ்வாய்க்கிழமை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.
 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசில் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த எச்.என்.அனந்த்குமார் (59), கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தார். பெங்களூரு, பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய கூட்டத்தில் பங்கேற்றிருந்த அனந்த்குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பெங்களூரு, பசவனகுடியில் உள்ள சங்கரா புற்றுநோய் மருத்துவமனையில் செய்யப்பட்ட மருத்துவ சோதனையில் அனந்த்குமாரின் நுரையீரலில் புற்றுநோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நியூயார்க் மற்றும் லண்டன் நகரங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை பலனளிக்காததைத் தொடர்ந்து, 25 நாள்கள் முன்பு பெங்களூருக்குத் திரும்பிய அனந்த்குமார், சங்கரா புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடர்ந்தார். ஆனால் திங்கள்கிழமை (நவ.12) அதிகாலை 2 மணிக்கு சிகிச்சை பலனின்றி அனந்த்குமார் உயிரிழந்தார். அந்த தருணத்தில் அவரது மனைவி தேஜஸ்வினி, மகள்கள் ஐஸ்வர்யா, விஜேதா ஆகியோர் உடனிருந்தனர்.
 தலைவர்கள் இரங்கல்: மத்திய அமைச்சர் எச்.என்.அனந்த்குமாரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெüடா, முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி, மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜே, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüஹான், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 கர்நாடக அரசு துக்கம்: அனந்த்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக அரசு, நவ.14-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்க முடிவு செய்துள்ளது.
 இறுதிச்சடங்கு: மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் உடல், செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நண்பகல் 1 மணிக்கு சாமராஜ்பேட்டையில் உள்ள மின் மயானத்தில் உடல் குடும்ப வழக்கப்படி தகனம் செய்யப்படுகிறது.

பிரதமர் மோடி நேரில் அஞ்சலி
பெங்களூரில் மறைந்த மத்திய அமைச்சர் எச்.என்.அனந்த்குமாரின் உடலுக்கு பிரதமர் மோடி திங்கள்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் இருந்து பெங்களூருக்கு தனி விமானம் மூலம் திங்கள்கிழமை இரவு 8.30 மணி அளவில் வருகை தந்த பிரதமர் மோடி, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  அனந்த்குமாரின் மனைவி தேஜஸ்வினி, மகள்கள் ஐஸ்வர்யா, விஜேதா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com