ஃபைசாபாத், அலாகாபாத் பெயர் மாற்றங்களுக்கு ஒப்புதல்

உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஃபைசாபாத் மண்டலத்தை அயோத்தியா என்றும், அலாகாபாத் மண்டலத்தை பிரயாக்ராஜ் என்றும் பெயர் மாற்றம் செய்வதற்கு மாநில


உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஃபைசாபாத் மண்டலத்தை அயோத்தியா என்றும், அலாகாபாத் மண்டலத்தை பிரயாக்ராஜ் என்றும் பெயர் மாற்றம் செய்வதற்கு மாநில அமைச்சரவை செவ்வாய்கிழமை ஒப்புதல் அளித்தது.
மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் லக்னெளவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக, சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர், சுரேஷ் கண்ணா செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரயாக்ராஜ் மண்டலம் என்பது பிரயாக்ராஜ், கெளஷாம்பி, ஃபடேபூர், பிரதாப்கார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகவும், அயோத்தியா மண்டலம் என்பது அயோத்தியா, அம்பேத்கர்நகர், சுல்தான்பூர், அமேதி, பராபங்கி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும் என்றார்.
முன்னதாக, அலாகாபாத், ஃபைசாபாத் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றம் செய்யப்படுவதை எதிர்த்து அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்துக்குள் பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தது. அதற்கு அடுத்த நாளிலேயே பெயர் மாற்றங்களுக்கு உத்தரப் பிரதேச அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்க முடிவாகும். 
உத்தரப் பிரதேச அரசு மேற்கொள்ளும் பெயர் மாற்ற நடவடிக்கைகளுக்கு சமாஜவாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆனால், முகலாயர்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊர்கள் மற்றும் வரலாற்று நினைவிடங்களின் பழைய பெயர்களையே மீண்டும் சூட்டுகின்ற நடவடிக்கைதான் மேற்கொள்ளப்படுகிறது என்று ஆளும் பாஜக விளக்கம் அளித்துள்ளது.
ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடத்தில், கடந்த 16-ஆம் நூற்றாண்டில், அப்போதைய முகலாய ஆட்சியாளர் பாபர், கோட்டை ஒன்றை கட்டியதுடன், பிரயாக் என்றிருந்த அப்பகுதிக்கு அலாகாபாத் எனப் பெயர் சூட்டியதாக வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com