அரசு மரியாதையுடன் அனந்த்குமாரின் உடல் தகனம்: பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி,
பெங்களூரில் மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் உடலுக்கு  நடைபெற்ற இறுதிச்சடங்கின்போது, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா
பெங்களூரில் மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் உடலுக்கு  நடைபெற்ற இறுதிச்சடங்கின்போது, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா


மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் ரசாயனத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தவர் அனந்த்குமார் (59). நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார். பசவனகுடியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா, கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி உள்பட மத்திய, மாநில அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். திங்கள்கிழமை இரவு சிறப்பு விமானத்தில் பெங்களூரு வந்த பிரதமர் மோடி, அனந்த்குமாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் பசவனகுடியிலிருந்து ஊர்வலமாக மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு ராணுவ வீரர்களின் உதவியுடன் கொண்டு செல்லப்பட்ட அனந்த்குமாரின் உடலுக்கு பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கெளடா உள்ளிட்ட அக் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். திமுக தலைவர்களுள் ஒருவரான டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். 
பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக பசவனகுடி நேஷனல் கல்லூரி மைதானத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட அனந்த்குமாரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அப்போது, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 
தொடர்ந்து சாம்ராஜ்பேட்டையில் உள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது சகோதரர் நந்தகுமார் தீ மூட்டினார். 
முன்னதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அனந்த்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


மத்திய அமைச்சரவை இரங்கல்
மறைந்த மத்திய அமைச்சர் எச். என். அனந்த் குமாருக்கு மத்திய அமைச்சரவை சிறப்பு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மத்திய ரசாயனங்கள் துறை அமைச்சராக இருந்த அனந்த் குமார்(59), கடந்த சில மாதங்களாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி பெங்களூரில் திங்கள்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை கூடியது. கூட்டம் கூடியதும், அனந்த் குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அந்த தீர்மானத்தில், மாணவர் அணியில் துடிப்பாக செயல்பட்ட அனந்த் குமார், பின்பு பாஜகவில் உறுப்பினரானார். அவரது பங்களிப்பாலும், திறமையாலும் கர்நாடகத்தில் பாஜக வளர்ச்சி பெற்றது. படிப்படியாக வளர்ச்சி பெற்று கர்நாடகத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் வரை அவரது பங்களிப்பு போற்றத்தக்கது. 
நாட்டின் பல துறைகளிலும் அவரது சேவை பாராட்டத்தக்கது. அனுபவம் வாய்ந்த ஒரு திறமையான தலைவரை நமது தேசம் இழந்து விட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com