ஆர்பிஐ செயல்பாடுகளில் மத்திய அரசின் தலையீடு?: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஆர்பிஐ செயல்பாடுகளில் மத்திய அரசின் தலையீடு?: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை


இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கமான நடைமுறைப்படி அதனைப் பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அண்மைக் காலமாக ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. அதில் உச்சமாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆர்பிஐ-யின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். வாராக் கடன் விவகாரத்தை ரிசர்வ் வங்கி சரிவரக் கையாளவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து ஆர்பிஐ ஆளுநர் பதவியை உர்ஜித் படேல் ராஜிநாமா செய்யப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், ஆர்பிஐ-யின் இருப்பில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடியை மத்திய அரசு கேட்பதாகவும், அந்தத் தொகையை வழங்க ஆர்பிஐ மறுப்பதால்தான் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை வெடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமன்றி, ஆர்பிஐ சட்டம் 7-ஆவது பிரிவைப் பயன்படுத்தி ரிசர்வ் வங்கிக்கு சில உத்தரவுகளை பிறப்பிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் எம்.எல்.சர்மா, பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதாக அதில் குறிப்பிட்டிருந்த அவர், இந்த விவகாரத்தில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும், வாராக்கடன்களை வசூலிக்குமாறு ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் சர்மா கோரிக்கை விடுத்திருந்தார்.
அதுமட்டுமன்றி, இந்த விவகாரத்தை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், அந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அதனைப் பரிசீலித்த நீதிபதிகள், மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் வழக்கமான நடைமுறைப்படியே அதன் மீது வாத, பிரதிவாதங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com