மகாராஷ்டிரம்: பாஜக எம்எல்ஏ ராஜிநாமா

மகாராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏ அனில் கோடே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏ அனில் கோடே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகள் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் மகாராஷ்டிர பாஜகவில் இணைந்தனர். அதற்கு அம்மாநிலத்தின் துலே தொகுதி எம்எல்ஏ அனில் கோடே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது எம்எல்ஏ பதவிக்கான ராஜிநாமா கடிதத்தை அடுத்த வாரம் தர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
நவம்பர் 19-ஆம் தேதி கூடவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரின் போது எனது ராஜிநாமா கடிதத்தை பேரவைத்தலைவரிடம் அளிக்க உள்ளேன். எனது எதிர்ப்பையும் மீறி, ஊழல் குற்ற பின்னணி உள்ளவர்கள் சிலரை பாஜகவில் இணைவதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் அனுமதித்துள்ளனர். துலே மாநகராட்சிக்கு அடுத்த மாதம் நடைபெற உள்ள தேர்தலில் அவர்கள் நின்று வெற்றி பெற்றால், தொகுதியை ஊழலால் அழித்து விடுவார்கள் என்று கூறினார். மேலும், துலே மாநகராட்சி மேயர் தேர்தலில் தான் போட்டியிட போவதாகவும் அவர் தெரிவித்தார். 
2009-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கோடே, கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். போலி முத்திரை தாள் மோசடியில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட கோடே, தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளார்.
முன்னதாக, நாகபுரி மாவட்டத்தின் கடோல் தொகுதி எம்எல்ஏ ஆஷிஷ் தேஷ்முக் தனது எம்எல்ஏ பதவியை கடந்த மாதம் ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com