ரஃபேல் வழக்கில் விசாரணை முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு 

ரஃபேல் வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. 
ரஃபேல் வழக்கில் விசாரணை முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு 

புது தில்லி: ரஃபேல் வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. 

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, பிரான்ஸிடம் இருந்து 126 ரஃபேல் ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. அதில், 18 விமானங்களைப் பறக்கும் நிலையில் இந்தியாவுக்கு வழங்குவது என்றும், எஞ்சிய 108 விமானங்களை பிரான்ஸின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் தயாரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தம் இறுதிசெய்யப்படவில்லை.

அதன் பிறகு, ஆட்சிக்கு வந்த மத்திய பாஜக கூட்டணி அரசு, பிரான்ஸிடம் இருந்து பறக்கும் நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. மேலும், போர் விமானங்களின் உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம், ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதில், பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு காங்கிரஸ் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்குரைஞர்கள் மனோகர் லால் சர்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுக்களை கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், 36 ரஃபேல் விமானங்களின் விலை விவரங்களை, மூடிய உறையில் வைத்து சீலிட்டு 10 நாள்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. அத்துடன் ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது தொடர்பான நடவடிக்கைகளின் விவரங்களை மனுதாரர்களுக்கு வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் வாதாடிய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், "ரஃபேல் விமானங்களில் விலை விவரங்கள் நாடாளுமன்றத்தில் கூட பகிர்ந்துகொள்ளப்படவில்லை' என்று கூறி, நீதிமன்றத்தில் அந்த விவரங்களை சமர்ப்பிக்க தயக்கம் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் அமர்வு, விமானங்களின் விலை விவரங்களை நீதிமன்றத்துடன் பகிர்ந்து கொள்ள இயலாத பட்சத்தில், அதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கு விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், மத்திய அரசு ரஃபேல் விமானங்களின் விலை விவரங்களை மூடிய உறையில் வைத்து சீலிட்டு உச்ச நீதிமன்றத்தில் திங்களன்று சமர்ப்பித்துள்ளது. அதிலுள்ள தகவல்களை நீதிபதிகள் அமர்வு 14-ஆம் தேதி விசாரணையின்போது கவனத்தில் கொள்ளும் எனத் தெரிகிறது.

முன்னதாக ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது தொடர்பான நடவடிக்கைகளின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், 14 பக்க ஆவணம் ஒன்றை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தது. "36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதென முடிவெடுக்கப்பட்டது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள்' என்ற தலைப்பிலான அந்த ஆவணத்தில் கூறப்பட்டிருந்ததாவது: 

ரஃபேல் ஒப்பந்தங்கள் கொள்முதலுக்கான நடவடிக்கையில், "பாதுகாப்புத் தளவாட கொள்முதல் நடைமுறைகள்-2013' முறையாக, முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. அதற்காக பாதுகாப்புத் தளவாட கொள்முதல் கவுன்சிலிடமும் ஒப்புதல் பெறப்பட்டது,

அந்த ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட "இந்திய பேச்சுவார்த்தைக் குழு', ஓராண்டு காலத்துக்கு பேச்சுவார்த்தை நடத்தியது. விமானங்களின் விலை, அவற்றை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான கால அவகாசம், பராமரிப்பு நிபந்தனைகளில் இந்திய பேச்சுவார்த்தைக் குழு சாதகமான முடிவைப் பெற்றது. டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தோடு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துடன் (காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில்) ஒப்பிடுகையில் லாபகரமானதாகவும், சிறப்பானதாகவும் இருந்தது.

அதன் பிறகு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவிடம் ரஃபேல் ஒப்பந்தத்துக்கு 2016 ஆகஸ்ட் 24-ஆம் தேதி அனுமதி பெறப்பட்டது. பின்னர் இந்திய-பிரான்ஸ் அரசுகளின் பாதுகாப்பு அமைச்சகங்கள் இடையே 2016 செப்டம்பர் 23-ஆம் தேதி ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது. பாதுகாப்புத் துறை விதிகளின்படி, ரஃபேல் விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான நடவடிக்கையில் தனது கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்கு முழு சுதந்திரம் உள்ளது.

108 ரஃபேல் விமானங்களை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்கும், இந்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கும் (ஹெச்ஏஎல்) இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.

டஸால்ட் நிறுவனத்தோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் ரஃபேல் விமானங்களை தயாரிப்பதற்கு ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு 2.7 மடங்கு அதிக கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது. முந்தைய ரஃபேல் கொள்முதல் ஒப்பந்த கோரிக்கையின்படி, டஸால்ட் நிறுவனமானது 18 விமானங்களை பிரான்ஸிலும், 108 விமானங்களை இந்தியாவிலுமாக 126 விமானங்களை தயாரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் 108 விமானங்களை தயாரிப்பது தொடர்பாக ஹெச்ஏஎல் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படவில்லை. இதனால் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ரஃபேல் ஒப்பந்தம் தோல்வியடைந்ததால், இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவின் எதிரி நாடுகள் 4 மற்றும் 5-ஆம் தலைமுறை நவீன போர் விமானங்களை 400-க்கும் அதிகமாக வாங்கிவிட்டன. எனவே நாமும் போர் விமானங்களை அவசரமாக வாங்க வேண்டிய தேவை எழுந்ததால், புதிய ஒப்பந்தத்தில் விமானங்களை பிரான்ஸிலேயே தயாரிக்கும் நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது என்று அந்த ஆவணத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கானது திங்களன்று விசாரணைக்கு வந்தபோது விமானப்படை உயர் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என்று உக்க்ஹ்ச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி அதிகாரிகளும் நேரில் ஆஜராகினர்.    

பின்னர் இரு தரப்பு விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று, விசாரணை முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com