சபரிமலை விவகாரம்: பெண்ணியவாதி த்ருப்தி தேசாய் 10 மணி நேரத்துக்கும் மேலாக கொச்சி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசிக்க வந்த பெண்ணியவாதி த்ருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளார். 
சபரிமலை விவகாரம்: பெண்ணியவாதி த்ருப்தி தேசாய் 10 மணி நேரத்துக்கும் மேலாக கொச்சி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசிக்க வந்த பெண்ணியவாதி த்ருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்நிலையில், சபரிமலை கோயிலில் தரிசனம் செய்வதற்காக பெண்ணியவாதி த்ருப்தி தேசாய் புணேவில் இருந்து இன்று காலை 4.45 மணிக்கு கொச்சி வந்தடைந்தார். ஆனால், அவரை விமான நிலைய வளாகத்தில் இருந்து வெளியே வர அனுமதிக்காமல் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சூழ்ந்தனர். 

நேரம் கூட கூட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பாஜகவைச் சேர்ந்த ஆர்வலர்களும் அவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீஸார் இருந்தபோதிலும், விமான நிலையத்தின் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் உள்ள அனைத்து நுழைவாயில் மற்றும் வெளியே வரும் பாதைகளை போராட்டக்காரர்கள் சூழ்ந்தனர். இதனால், த்ருப்தி தேசாய் தற்போது 10 மணி நேரத்துக்கும் மேலாக கொச்சி விமான நிலையத்திலேயே உள்ளார். 

இதுதொடர்பாக, பாஜக செய்தித்தொடர்பாளர் ஷோபா சுரேந்திரன் கூறுகையில், "சபரிமலை கோயிலில் பெண்கள் செல்வதை காணத்துடிக்கும் எங்களது முதல்வர் போன்ற நாத்திகவாதிகளின் ஆதரவு தேசாய்க்கு உள்ளது. அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவதை அனுமதிக்கமாட்டோம்" என்றார்.  

இதற்கிடையே, சபரிமலை ஐயப்பனை தரிசிக்காமல் மகாராஷ்டிராவுக்கு திரும்பமாட்டேன் என்று த்ருப்தி தேசாய் தெரிவித்தார். 

முன்னதாக, சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 28-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவோம் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசின் முடிவை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இதர வலதுசாரி சிந்தனை கொண்ட அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இதற்கிடையே, கோயில் நடை கடந்த அக்டோபர் மாதம் 4 நாட்களும், நவம்பர் மாதம் 2 தினங்களும் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்டது. அப்போது, 10 முதல் 50 வயதுக்கிடையிலான ஒரு சில பெண்கள் கோயிலுக்கு சென்று தரிசிக்க முயற்சித்தனர். ஆனால், போராட்டங்களின் வீரியம் காரணமாக அவர்களால் கோயிலுக்குள் சென்று தரிசனம் மேற்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், த்ருப்தி தேசாய் சபரிமலை கோயிலில் இன்று தரிசனம் மேற்கொள்ளப்போவதாக கடந்த புதன்கிழமை அறிவித்தார். மேலும், தரிசனம் மேற்கொள்ள கேரளாவுக்கு வரும்போது தனக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் அனுப்பியிருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com