தூத்துக்குடி நிலத்தடி நீர் விவகாரம் : மத்திய அரசு பதில் மனு தாக்கல்

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசடைந்தது தொடர்பாக மத்திய நீர்வள ஆதார அமைப்பின் அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு சார்பில் பதில்


தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசடைந்தது தொடர்பாக மத்திய நீர்வள ஆதார அமைப்பின் அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனு விவரம்:
மத்திய அரசின் மத்திய நீர்வள ஆதார அமைப்பு, தமிழக அரசின் முன் அனுமதியின்றி தூத்துக்குடியின் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் அடிப்படையில், அங்கு நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மட்டுமே காரணம் இல்லை என கடந்த செப்டம்பர் 5 -ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறை விரிவாக ஆய்வு மேற்கொண்டு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசின் மத்திய நீர்வள ஆதார அமைப்பு தமிழக அரசிடமிருந்து எந்தவொரு முன் அனுமதியும் பெறாமல் ஆய்வு நடத்தி, இதுபோன்ற அறிக்கையை வெளியிட்டிருப்பதால், அந்தப் பகுதியில் மீண்டும் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அந்த அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 
பதில் மனு: இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மத்திய நீர்வள ஆதார அமைப்பின் அறிக்கையை தமிழக அரசு சரியாக புரிந்துகொள்ளவில்லை. தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசடைவதற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல என்ற மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் தமிழக அரசின் விருப்பம். அது தொடர்பாக கருத்துக் கூற விரும்பவில்லை.
மேலும், மத்திய -மாநில அரசுகளுக்கு இடையிலான இந்த வழக்கை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கை உச்சநீதிமன்றம்தான் விசாரிக்க முடியும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் நவம்பர் 19 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com