நேரு குடும்பத்தை சேராத தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள்: மோடிக்கு சிதம்பரம் பதிலடி

பாபா சாகேப் அம்பேத்கர், லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர், மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் இந்த பதவியை அலங்கரித்துள்ளனர். இன்னும் பலரை உதாரணம் காட்டலாம்
நேரு குடும்பத்தை சேராத தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள்: மோடிக்கு சிதம்பரம் பதிலடி


புதுதில்லி: நேரு குடும்பத்தை சேராத தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து இருக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. அதனால் அந்த மாநில அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பலர் அங்கு முகாமிட்ட வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று வெள்ளிக்கிழமை (நவ.16) கலந்துகொண்டு பேசுகையில், மோடி எப்படி தேசத்தின் பிரதமராக உருவெடுக்க முடிந்தது? எப்படி ஓர் ஏழைத் தாயின் மகனால் நாடாள முடிகிறது? தேநீர் விற்ற எளிய மனிதன் எப்படி இத்தனை உயரத்தை அடைய முடிந்தது? என்ற கேள்விகள் இன்னமும் சிலரை (காங்கிரஸார்) துளைத்துக் கொண்டே இருக்கிறது. அதை நினைத்து, நினைத்து அவர்கள் மனதளவில் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

தில்லி செங்கோட்டையின் ராஜபாட்டையில் நின்று உரையாற்றும் உரிமை ஒரே ஒரு குடும்பத்துக்கு (நேரு குடும்பம்) உரித்தானது அல்ல என்று மக்கள் உணர்ந்ததன் விளைவுதான் நான் பிரதமராகியுள்ளேன். ஜவாஹர்லால் நேருவால் ஜனநாயகம் தழைத்தோங்கியதாகவும், அதன் பயனாகத்தான் இன்றைக்கு தேநீர் விற்றவர்கள்கூட தேசத்தின் தலைமைப் பொறுப்பு வர முடிகிறது என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகின்றனர்.

ஒரு வேளை, நேரு வகுத்தளித்த ஜனநாயகத்தால்தான் நான் இப்பதவிக்கு வந்தது உண்மையெனில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு அவரது குடும்பத்தைச் சாராத ஒருவரை 5 ஆண்டுகளுக்கு நியமிக்கட்டும். அப்போது அந்தக் கூற்றை ஒப்புக் கொள்கிறேன்.

ஏறத்தாழ நான்கு தலைமுறைகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியால் இந்தியாவுக்கு என்ன பயன் கிடைத்தது? என்று கேள்வி எழுப்பிய மோடி, ஒரு நான்கரை ஆண்டுகளாக நான் பிரதமராக இருப்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை என கூறியிருந்தார்.

இந்நிலையில், அவரது கேள்விக்கு மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘1947 ஆம் ஆண்டில் இருந்து ஆச்சாரியா கிருபாலானி, பட்டாபி சித்தராமையா, புருஷோத்தம்தாஸ் தான்டன், யூ.என். தேபர், சஞ்சீவ ரெட்டி, சஞ்சீவைய்யா, காமராஜர், நிஜலிங்கப்பா, சி.சுப்பிரமணியன், ஜகஜீவன் ராம், ஷங்கர் தயாள ஷர்மா, டி.கே.பரூவா, பிரமானந்த ரெட்டி, பி.வி.நரசிம்ம ராவ், சீதாராம் கேசரி ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களாக பதவி வகித்துள்ளனர் என்பதை மோடி நினைவில்கொள்ள வேண்டும்’ என கூறியுள்ளார். 

எளிய கும்பத்தில் பிறந்த தலைவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். சுதந்திரத்துக்கு முன்னர் பாபா சாகேப் அம்பேத்கர், லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர், மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் இந்த பதவியை அலங்கரித்துள்ளனர். இன்னும் பலரை உதாரணம் காட்டலாம் என சிதம்பரம் பட்டியலிட்டுள்ளார்.

விவசாயிகள் தற்கொலை, வேலைவாய்ப்பின்மை, கும்பல் வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, காதலருக்கு எதிரான வன்முறைகள், பசு பாதுகாப்பு கும்பல்களின் வன்முறை, அதிகரிக்கும் பயங்கரவாத தாக்குதல்கள் ஆகியவற்றைப் பற்றியும் பிரதமர் பேசுவாரா? 

மேலும்,  காங்கிரஸ் தலைவர் யார் என்பதைப் பற்றிக் கவலைப்பட்டு பிரதமர் நீண்ட நேரம் பேசுகிறார். அந்த நேரத்தில் ஒரு பாதியை ஒதுக்கி பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி, ரபேல், சிபிஐ மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றைப் பற்றி பிரதமர் பேசுவாரா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com