உபரி நிதி குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு: ரிசர்வ் வங்கி முடிவு

உபரி நிதி ரூ.9.69 லட்சம் கோடி குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைப்பதென்று ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
உபரி நிதி குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு: ரிசர்வ் வங்கி முடிவு

உபரி நிதி ரூ.9.69 லட்சம் கோடி குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைப்பதென்று ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி தன்னிடம் எவ்வளவு மதிப்புக்கு உபரி நிதியை வைப்பது தொடர்பாகவும், சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு கடன் அளிப்பது தொடர்பான  விதிகள் மற்றும் நலிந்த வங்கிகள் தொடர்பான விதிகள் ஆகிய விவகாரங்கள் தொடர்பாகவும் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாக செய்திகள் வெளிவந்தன. இதை உறுதிப்படுத்தும்  வகையில், மத்திய அரசை ரிசர்வ் வங்கி துணை நிலை கவர்னர்கள் விமர்சனமும் செய்தனர். அதேபோல், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் எந்நேரமும் தனது பதவியை ராஜிநாமா செய்யலாம் என்றும் கூறப்பட்டது.
இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில், தில்லியில் ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், துணை கவர்னர்கள், மத்திய அரசின் நியமன இயக்குநர்களான பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், நிதி சேவைகள் துறை செயலர் ராஜீவ் குமார்,  எஸ். குருமூர்த்தி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
இக்கூட்டம் சுமார் 9 மணி நேரம் நீடித்தது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், மத்திய அரசு மற்றும் குருமூர்த்தி ஆகியோர் வங்கி சாராத நிதி அமைப்புகளுக்கு ரிசர்வ் வங்கி அதிக மூலதனம் அளிக்க வேண்டும், சிறு வணிகர்களுக்கு ஏதுவாக கடன் விதிகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது.
இக்கூட்டத்துக்குப் பிறகு ரிசர்வ் வங்கி தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், "ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதி ரூ.9.69 லட்சம் கோடி தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு கவலை தரும் பிரச்னைகள் குறித்து ரிசர்வ் வங்கியின் நிதி மேலாண்மை வாரியம் ஆய்வு செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ரிசர்வ் வங்கி, மத்திய அரசு இடையே மோதல் இல்லை': 
இதனிடையே, மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு நிலவவில்லை என்றார். அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் நிலவுவதாக எங்களுக்கு தெரியவில்லை. 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஊடகத்தினர் ஆகியோர்தான், மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் பதற்றம் நிலவுவதாக தெரிவித்து வருகிறார்கள். ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியில் இருந்து ஒரு பைசாவை கூட கோரவில்லை என்று மத்திய அரசு ஏற்கெனவே தெளிவுப்படுத்தி விட்டது.அதேநேரத்தில், முக்கியமான அமைப்பான ரிசர்வ் வங்கிக்கு, நாட்டின் நலன் மீது சில கடமைகள் உள்ளன. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தினால், அதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டார்கள். நாட்டிலுள்ள அரசியலமைப்பு அமைப்புகளை முந்தைய காங்கிரஸ் அரசுகள் எவ்வாறு அவமதிப்பு செய்தன என்பது குறித்து மக்களுக்கு நன்கு தெரியும். அதேபோல், கடந்த காலங்களில் ரிசர்வ் வங்கி கவர்னர்களாக இருந்தோரை, அப்போதைய காங்கிரஸ் அரசுகள் எப்படி பணிநீக்கம் செய்தன என்பது குறித்தும் நாட்டு மக்கள் அறிவார்கள் என்றார் பியூஷ் கோயல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com