குஜராத் கலவர வழக்கு: மோடிக்கு எதிரான மனு நவ.26-இல் விசாரணை

குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 26-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத் கலவர வழக்கு: மோடிக்கு எதிரான மனு நவ.26-இல் விசாரணை

குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 26-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கலவரம் மூண்டது. அதில், 1,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோனர் முஸ்லிம்கள். இந்த கலவரத்தில், அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), நரேந்திர மோடிக்கு நற்சான்று அளித்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த குஜராத் உயர் நீதிமன்றம், நரேந்திர மோடிக்கு சிறப்பு புலனாய்வுக் குழு நற்சான்று அளித்ததை உறுதிசெய்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனு, நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாகியா ஜாஃப்ரி சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.யு.சிங், ""இந்த வழக்கில் முதன்மை மனுதாரரான ஜாகியா ஜாஃப்ரி 80 வயது பெண்மணி என்பதால், அவருக்கு  உதவிடும் வகையில், சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட்டை இரண்டாவது மனுதாரராக சேர்க்க வேண்டும்'' என்று வாதிட்டார்.
அவரது கோரிக்கைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி மறுப்பு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: 
ஜாகியா ஜாஃப்ரியின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மேலும், இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நடைபெற்றபோது எந்தவித்திலும் தொடர்பில் இல்லாத சீதல்வாட்டை இரண்டாவது மனுதாரராக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று முகுல் ரோத்தகி வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு மீது விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மனு மீதான விசாரணை, வரும் 26-ஆம் தேதி நடைபெறும். அதற்குள், இரண்டாவது மனுதாரராக சீதல்வாட்டை சேர்ப்பது குறித்து ஆராயப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com