சபரிமலை: பக்தர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் 69 பேர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து
சபரிமலை: பக்தர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் 69 பேர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மாநிலத்தின் பல இடங்களிலும் பாஜக, யுவ மோர்ச்சா அமைப்பினர் உள்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முடிவெடுத்ததை அடுத்து, பாஜக,காங்கிரஸ், ஆர்எஸ்எஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2 மாத கால மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. அதையடுத்து கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. 
இந்நிலையில், கோயில் சந்நிதானத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் பக்தர்கள் சிலர் ஐயப்பன் நாமத்தை கோஷமிட்டு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவும் 69 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களை மன்னியார் முகாமுக்கு கொண்டு வந்தனர். சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் பினராயி விஜயன் வீட்டுக்கு முன்னிலையிலும், மன்னியார் முகாம் முன்பும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். யுவ மோர்ச்சா அமைப்பை சேர்ந்த 5 பேர், கைகளில் கொடிகளை ஏந்தி முதல்வரின் காரின் முன்பு விழ முயற்சித்தனர். அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 69 பேரும் திங்கள்கிழமை மாலை கேரள உயர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். பக்தர்கள் மீதான காவல் துறையினரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இது போன்ற சம்பவம் மறுபடி நடைபெற்றால் காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். 
மேலும், கைது செய்யப்பட்டவர்களை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கண்டனம்: ஐயப்ப பக்தர்கள் கைது செய்யப்பட்டதற்கு மத்திய அமைச்சர் கே. ஜே. அல்போன்ஸ் கண்ணன்தானம் மற்றும் கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நிலக்கல் முகாமுக்கு திங்கள்கிழமை வருகை தந்த அல்போன்ஸ் இது தொடர்பாக பேசுகையில், "சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டியதன் அவசியம் என்ன? ஐயப்பன் கோயில் வளாகத்தை கேரள அரசு போர்க்களமாக மாற்றி வருகிறது. யாத்திரைக்காக வந்தவர்கள் பக்தர்கள்; பயங்கரவாதிகள் அல்ல. பக்தர்களை வழிப்பறி கொள்ளைக்காரர்களைப் போல அரசு நடத்துகிறது. சோவியத் நாட்டில் ஸ்டாலின் ஆட்சி செய்ததை போல இங்கு உள்ளது. சட்டம், ஒழுங்கு என்ன ஆனது? இதுதான் ஜனநாயகமா? ' என்று கேள்வி எழுப்பினார். 
இதனிடையே, பக்தர்களுக்கு எதிராக காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த ரமேஷ் சென்னிதலா, மாநிலத்தில் ஹிட்லர் ஆட்சி நடைபெறுகிறதா? என்று கேட்டு பினராயி விஜயன் தலைமையிலான அரசை தாக்கிப் பேசினார். மேலும், அவர் பேசுகையில், " கோயிலின் அமைதியை குலைக்கும் வகையில் போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய வேண்டுமே தவிர அப்பாவி பக்தர்களை அல்ல. உண்மையான பக்தர்களை கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது காவல்துறையின் அகந்தையை காட்டுகிறது' என்றார் சென்னிதலா.
நீதிமன்ற விசாரணை தேவை: சபரிமலையில் பக்தர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை தேவை என்று கேரள மாநில பாஜக தலைவர் பி. எஸ். ஸ்ரீதரன்பிள்ளை தெரிவித்துள்ளார்.

"காவல்துறையின் நடவடிக்கை சரியே'

சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல் துறையினரின் நடவடிக்கை நியாயமானதுதான் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதுதொடர்பாக  கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "ஐயப்பன் கோயிலில் பிரச்னையை உருவாக்குவதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அங்கு தங்கியுள்ளனர். அவர்கள் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திட்டமிட்டு இவ்வாறு செயல்படுகின்றனர். ஆனால் கோயில் வளாகத்தில் பிரச்னையை உருவாக்க அரசு அனுமதிக்காது. அதுமட்டுமன்றி கைது செய்யப்பட்டவர்கள் யாரும் உண்மையான ஐயப்ப பக்தர்கள் இல்லை. அரசு எப்போதும் ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாகத்தான் செயல்படும். உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டிய கடமையை அரசு செய்து வருகிறது. சபரிமலைக்கு வருகை தரும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது' என்றார்.
மேலும்,  ஐயப்ப பக்தர்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது என்ற பிம்பத்தை மக்களிடையே உருவாக்க வேண்டாம் என்று ஊடகங்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com