வர்த்தகத்துக்கு உகந்த நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் வர இந்தியா இலக்கு

வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் வர இந்தியா இலக்கு நிர்ணயித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வர்த்தகத்துக்கு உகந்த நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் வர இந்தியா இலக்கு

வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் வர இந்தியா இலக்கு நிர்ணயித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தில்லியில் இந்திய தொழிற்துறை சார்பில் வர்த்தகம் தொடர்பான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசியதாவது:
நாட்டில் கொள்கை முடக்கம் என்பது முடிவுக்கு வந்து விட்டது. மத்தியில் ஆட்சியிலிருக்கும் எனது அரசானது, கொள்கையை அடிப்படையாக கொண்டு நிர்வாகம் செய்து வருகிறது. இதனாலேயே, உலக வங்கி கடந்த 2014ஆம் ஆண்டில் வெளியிட்ட வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் 142ஆவது இடத்தில் இருந்த இந்தியாவால்  77ஆவது இடத்துக்கு முன்னேற முடிந்தது.
வர்த்தக நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஈடுபடுவதை மிகவும் எளிதாக்கும் வகையிலான நடைமுறைகளையும், சீர்திருத்தங்களையும், எனது அரசு தொடர்ந்து செயல்படுத்தும். நாட்டின் பொருளாதார மதிப்பை 5 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தொடர்ச்சியான சீர்திருத்த நடவடிக்கைகளால்தான், உலக அளவில் நம்பகமான இடத்தை நமது நாடு பெற முடிந்தது. அதேபோல், சர்வதேச செலாவணி நிதியம், உலக வர்த்தக அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளின் அங்கீகாரமும் நமது நாட்டுக்கு கிடைத்தது. இந்த அமைப்புகள் அனைத்தும், நமது நாடு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், உலகில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில், நமது நாட்டையும் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது விரைவில் சாத்தியப்படும் என நம்புகிறோம். இந்த இலக்கை நமது நாடு அடைவதற்கு, பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையையும் மேம்படுத்த வேண்டியுள்ளது.
வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடத்துக்குள் இந்தியா வர வேண்டும் என்ற திட்டத்தை முதன்முதலில் வெளியிட்டபோது, அது சந்தேகத்துடனேயே வரவேற்கப்பட்டது. இருப்பினும், கடந்த 4 ஆண்டுகளில் நமது பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது கண்கூடாகவே தெரிகிறது. 
வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் நமது நாட்டை முதல் 50ஆவது இடங்களுக்குள் கொண்டு வருவதற்கு, மத்திய, மாநில அரசுகள் கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகின்றன என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com