ஹரியாணா: குன்ட்லி-மானேசர் நெடுஞ்சாலையைத் திறந்துவைத்தார் மோடி

ஹரியாணா மாநிலத்தில், பல ஆண்டுகளாக அமைக்கப்பட்டு வந்த குன்ட்லி-மானேசர் நெடுஞ்சாலையின் பணிகள் நிறைவடைந்ததையடுத்து,
ஹரியாணா மாநிலம், குருகிராம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நெடுஞ்சாலை திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயண ஆர்யா, மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார்.
ஹரியாணா மாநிலம், குருகிராம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நெடுஞ்சாலை திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயண ஆர்யா, மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார்.

ஹரியாணா மாநிலத்தில், பல ஆண்டுகளாக அமைக்கப்பட்டு வந்த குன்ட்லி-மானேசர் நெடுஞ்சாலையின் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடி அதனை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
இத்துடன், 3.2 கி.மீ. நீளமுள்ள பல்லாபாகர்-முஜேசார் இடையிலான மெட்ரோ ரயில் வசதியையும் தொடங்கிவைத்த மோடி, பல்வல் மாவட்டத்தில் உள்ள துதோலா பகுதியில் ரூ.989 கோடி செலவில் அமையவுள்ள ஸ்ரீவிஷ்வகர்மா திறன் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.
குருகிராம் மாவட்டத்திலுள்ள சுல்தான்பூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
மொத்தம் 83 கி.மீ. நீளம் கொண்ட "மேற்குப்புற நெடுஞ்சாலை' என்றழைக்கப்படும் குன்ட்லி-மானேசர் நெடுஞ்சாலைப்பணி கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போதைய பாஜக ஆட்சியிலேயே இத்திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட்டது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், அனைத்துத் திட்டங்களுக்கும் பல்வேறு தடைகள் நிலவி வந்த நிலையில், அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் தாமதப்படுத்தப்பட்டன.
இந்த நெடுஞ்சாலைத் திட்டம் 9 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டியது. கடந்த 2010-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் அரசின் முறையான திட்டமிடல் இல்லாமை, தவறாக வழிநடத்துதல் ஆகியவற்றால் அதனை முடிக்க இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது.
திட்டம் ஆரம்பிக்கப்படும் போது ரூ.1,200 கோடி செலவாகும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், திட்டம் முடியும்போது, அதை விட 3 மடங்கு அதிக செலவு ஆகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், மக்கள் பணத்தை எப்படி வீணடிக்க முடியும்? என்றும், மக்களுக்கு எப்படி அநீதி இழைக்க முடியும்? என்றும் காங்கிரஸ் காட்டியுள்ளது. 
இத்துடன், பல்லாபாகர்-முஜேசார் இடையிலான மெட்ரோ ரயில் வசதியும் ஹரியாணா மக்களின் வசதிக்காகத் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் மாநிலத்தில் போக்குவரத்துக்கான புதிய புரட்சி தொடங்கியுள்ளது. மேலும், மாநில இளைஞர்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீவிஸ்வகர்மா திறன் பல்கலைக்கழகம் கட்டப்படவுள்ளது என்று மோடி தெரிவித்தார்.
அரசியல் ஆதாயத்துக்காகத் திறப்பு: நெடுஞ்சாலை திறப்புவிழா குறித்து, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், "அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களைக் கவரும் நோக்கிலும், அரசியல் ஆதாயத்துக்காகவும் பணிகள் முழுமையாக நிறைவடையாத நெடுஞ்சாலையை பாஜக அரசு திறந்துவைத்துள்ளது. இதன் மூலம் மக்களின் உயிருடன் பாஜக அரசு விளையாடுகிறது' என்று தெரிவித்தார்.
சுகாதாரத்துக்கு முன்னுரிமை: இதனிடையே, "உலக கழிவறை தினம்' திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி, "நாடு முழுவதும் சுதாதாரத்துக்கும், தூய்மைப் பணிகளுக்கும் கடந்த 4 ஆண்டுகளாக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. தூய்மை இந்தியா திட்டம் மூலம் நாட்டின் சுகாதாரப் பணிகளுக்கு பங்களித்து வரும் அனைவருக்கும் நன்றி' என்று சுட்டுரையில் பதிவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com