சிபிஐ இயக்குநரின் பதில் மனு கசிவு: உச்சநீதிமன்றம் கண்டனம்

ஊழல் குற்றச்சாட்டு வழக்கை எதிர்கொண்டு வரும் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, அது தொடர்பாகத் தாக்கல் செய்த பதில் மனுவிலுள்ள தகவல்கள் ஊடகங்களில்
சிபிஐ இயக்குநரின் பதில் மனு கசிவு: உச்சநீதிமன்றம் கண்டனம்


ஊழல் குற்றச்சாட்டு வழக்கை எதிர்கொண்டு வரும் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, அது தொடர்பாகத் தாக்கல் செய்த பதில் மனுவிலுள்ள தகவல்கள் ஊடகங்களில் கசிந்ததையடுத்து, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அலோக் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தாக்கல் செய்த மனுவுக்கு உரிய பதில் மனுவைத் தாக்கல் செய்ய அலோக் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, தன் தரப்பு வாதங்களை பதில் மனுவாக மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து அலோக் வர்மா திங்கள்கிழமை தாக்கல் செய்தார். இத்தோடு, தன்னை விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அலோக் வர்மா தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 
இவற்றின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
அப்போது, அலோக் வர்மா மூடி முத்திரையிட்ட உறையில் வைத்துத் தாக்கல் செய்த விவரங்கள் ஊடகங்களில் வெளியானது குறித்து அறிந்த நீதிபதிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். இது போன்ற நிகழ்வுகளுக்குக் கடும் கண்டனமும் தெரிவித்தனர். 
இதற்குப் பதிலளித்த நாரிமன் கூறியதாவது: இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது முற்றிலும் அங்கீகாரமற்றது. இந்த விவகாரம் என்னைப் பெருமளவில் பாதித்துள்ளது என்று தெரிவித்தார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், உங்கள் யாருக்கும் வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று கூறி விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மீண்டும் முறையீடு: ஆனால், வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று நாரிமன் நீதிபதிகளிடம் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மற்ற வழக்குகளின் விசாரணை முடிந்த பின்னர் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.
பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கூறியதாவது:
சின்ஹாவுக்குக் கண்டனம்: தன்னுடைய பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த ஊழல் புகார் விசாரணையில் பல்வேறு முக்கிய நபர்கள் தலையிட்டதாகவும் சிபிஐ மூத்த அதிகாரி எம்.கே. சின்ஹா குற்றம் சாட்டி மனு தாக்கல் செய்திருந்தார்.
இதில் தொடர்புடைய நபர்களின் பெயர்களை பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்று கூறியிருந்தோம். ஆனால், அடுத்த நாளே அவர்கள் அனைவரது பெயர்களும் ஊடகங்களில் வெளியாகின. 
இந்த வழக்கில் சிபிஐ-யின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, அலோக் வர்மாவின் பதில் மனுவை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்துத் தாக்கல் செய்ய உத்தரவிட்டோம். அத்தோடு, சின்ஹாவையும் கேட்டுக்கொண்டோம். ஆனால், அதற்கு யாரும் ஒத்துழைப்பதாகத் தெரியவில்லை. இது குறித்து மேலும் விசாரணை நடத்த நாங்கள் விரும்பவில்லை என்று கூறி வழக்கை வரும் 29-ஆம் தேதிக்கே மீண்டும் ஒத்திவைத்தனர்.
சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மத்திய அமைச்சர் ஹரிபாய் பார்திபாய் செளதரி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி. செளதரி ஆகியோர் தலையிட முயற்சித்ததாக எம்.கே. சின்ஹா திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com