மும்பை தாக்குதல் நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

உலகையே உலுக்கிய மும்பை தாக்குதல் சம்பவத்தின் 10ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
மும்பை தாக்குதல் நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி


புது தில்லி: உலகையே உலுக்கிய மும்பை தாக்குதல் சம்பவத்தின் 10ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மும்பையில் 26/11 தாக்குதலின் நினைவு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்  தங்களது அஞ்சலி தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் செய்தியில், மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள், குடும்பத்தினர் மீது நினைவு செல்கிறது. பயங்கரவாதத் தாக்குதலை தடுத்து நிறுத்த தங்களது இன்னுயிரை அளித்த காவல்துறையினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் வீர வணக்கம் செலுத்துகிறோம்.

பயங்கரவாதத்தை முறியடிக்கவும், சட்டத்தை நிலைநாட்டவும் பாடுபட்டவர்களுக்கு இந்தியா மரியாதை செலுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், மிக பயங்கரத் தாக்குதல் என்று நினைவு கூர்ந்திருக்கிறார். மேலும், பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன், பயங்கரவாதிகளுடனான சண்டையில் இன்னுயிரை இழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவிக்கிறேன். மும்பை தாக்குதலின் போது பயங்கரவாதிகளை தடுக்கும் போரில் நாட்டுக்காக தங்களது இன்னுயிரைக் கொடுத்த தீரமும், வீரமும் மிக்க காவலர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் வீர வணக்கம் செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதல்.. நடந்தது என்ன?
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல்வழியாக ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர்.

தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டார். நீண்ட வழக்கு விசாரணைக்கு பிறகு, கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி அவரும் தூக்கிலிடப்பட்டார்.

இந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர்கள் ஹபீஸ் சையது, ஜக்கியூர் ரகுமான் லக்வி ஆகியோருக்கு எதிராக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்கா கோரிக்கையை இந்தியா நிராகரிப்பு: இதனிடையே, மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை கொல்வதற்கு கமாண்டோ (அதிரடிப்படை) வீரர்களை அனுப்பி வைக்க தயார் என்று அமெரிக்கா விடுத்த கோரிக்கையை இந்தியா நிராகரித்து விட்ட தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து மும்பை தாக்குதல் சம்பவத்தின்போது அமெரிக்க அதிபர் மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் தெற்காசிய பிராந்திய விவகார இயக்குநராக பணியாற்றிய கோயல் கூறுகையில், "மும்பையில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த ஹோட்டல்களுக்குள் ஊடுருவி அவர்களை கொல்வதற்கு கமாண்டோ படையை அனுப்பி வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்தது. தாக்குதலில் ஈடுபட்டோர் தொடர்பான பின்னணி குறித்து அறிய தடயவியல் துறை நிபுணர்களையும் அனுப்ப விருப்பம் தெரிவித்தது. இந்த கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை' என்றார்.

கசாப் வழக்குரைஞர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை!: மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் கீழ்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அஜ்மல் கசாப்புக்கு ஆதரவாக வாதாட சட்ட சேவைகள் துறை வழக்குரைஞர்கள் அமின் சோல்கர், பர்ஹானா ஷா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு இன்னமும் மகாராஷ்டிர அரசு ஊதியம் வழங்கவில்லை. 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "எதற்காக எங்களது ஊதியத்தை அளிக்க மாநில அரசு முன்வரவில்லை எனத் தெரியவில்லை. உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு வெளியிடப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்து, கசாபும் தூக்கிலிடப்பட்டு விட்டார். ஆனால் நாங்கள் இன்னமும் ஊதியத்துக்காக காத்திருக்கிறோம். ஊதியத்தை அளிக்க மாநில அரசு சுணக்கம் காட்டினால், சட்டரீதியில் நடவடிக்கை எடுப்போம்' என்றனர்.

பாகிஸ்தான் மீது அரசு வழக்குரைஞர் குற்றச்சாட்டு: இந்நிலையில், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது, லக்வி ஆகியோருக்கு எதிரான விசாரணை தாமதமடைந்து வருவதற்கு பாகிஸ்தானே காரணம் என்று அந்த வழக்கில் அரசு சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் உஜ்வல் நிகாம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், "வழக்கு விசாரணை தாமதமடைவதற்கு பாகிஸ்தானே பொறுப்பு; பாகிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை அகற்றுவதற்கு அந்நாடு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com