உலகத் தூய்மைக்கு 'இந்த' நான்கும் முக்கியத் தேவை: காந்தி பிறந்தநாளில் பிரதமர் மோடி பேச்சு

 மகாத்மா காந்தி சர்வதேச தூய்மை மாநாடு குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் 4 நாட்கள் நடைபெறுகிறது. 
உலகத் தூய்மைக்கு 'இந்த' நான்கும் முக்கியத் தேவை: காந்தி பிறந்தநாளில் பிரதமர் மோடி பேச்சு

இந்திய விடுதலைக்குப் போராடியவரும், நேர்மை மற்றும் அஹிம்சையை போற்றியவரும், தேசப் பிதாவாக அறியப்படும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா அக்டோபர் 2-ஆம் தேதி நாடு முழுவதும் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. 

இதையடுத்து தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், மகாத்மா காந்தி சர்வதேச தூய்மை மாநாடு குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகம் முழுவதிலும் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். இதன் துவக்க விழா காந்தி ஜெயந்தி அன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

உலகளவில் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த நாடுகளும் தூய்மை திட்டத்துக்காக தற்போதுதான் முதன்முறையாக ஒன்றிணைந்துள்ளன. இந்நேரத்தில் அனைவரின் சார்பிலும் நான் மகாத்மா காந்திக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். 

சுதந்திரத்துக்குப் போராடும் போது மகாத்மா காந்தி கூறிய ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். அதில், சுதந்திரத்தை விட தூய்மைக்கே தான் முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்தார். எனவே தூய்மை என்பது காந்தியின் மனதில் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். 

இந்த உலகத்தை தூய்மையாக வைத்திருக்க சிறந்த அரசியல் தலைமை, பொது நிதி விநியோகத் திட்டம், கூட்டுமுயற்சி மற்றும் மக்களின் பங்களிப்பு ஆகியன மிக முக்கியமான 4 அம்சங்களாகும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com