ஈரான் மீதான தடையை விலக்கிக் கொள்ள அமெரிக்காவுக்கு ஐ.நா. நீதிமன்றம் உத்தரவு

ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள சில தடைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரான் மீதான தடையை விலக்கிக் கொள்ள அமெரிக்காவுக்கு ஐ.நா. நீதிமன்றம் உத்தரவு

ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள சில தடைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனித நேய அடிப்படையில் அத்தியாவசியப் பொருள்கள் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த உத்தரவு, டிரம்ப் நிர்வாகத்துக்கு பின்னடவாகக் கருதப்படுகிறது.
ஈரானுக்கும், அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கும், ஜெர்மனி ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே, கடந்த 2015-ஆம் ஆண்டு வியன்னா நகரில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. தனது அணுசக்தி திட்டங்கள், அணு ஆயுதத் தயாரிப்புக்கானவை அல்ல என்பதை உறுதிப்படுத்துவதாக ஈரானும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையை விலக்கிக் கொள்வதாக  அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும் ஒப்புக் கொண்டன. ஒபாமா அதிபராக இருந்தபோது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக டிரம்ப் விமர்சித்து வந்தார்.
இதையடுத்து, டிரம்ப் அதிபரான பிறகு ஈரான்-அமெரிக்கா இடையேயான உறவு சுமுகமாக இல்லை. இந்நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக டிரம்ப் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து,  ஈரான் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் முதல் கட்ட பொருளாதாரத் தடை விதித்தார். அதன்படி, ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மீறினால், வர்த்தக உறவு துண்டிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து, வரும் நவம்பரில் இரண்டாம் கட்ட பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அவர் அறிவித்தார். அதன்படி, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாது என்று அவர் எச்சரித்தார்.
அமெரிக்காவின் நடவடிக்கையை எதிர்த்து ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் முறையிட்டது. அத்தியாவசியப் பொருள்களுக்கான தடையை அமெரிக்கா விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஈரான் முறையிட்டது. இந்த விவகாரம், தலைமை நீதிபதி அப்துல்கவி அகமது யூசுஃப் முன்னிலையில் புதன்கிழமை விசாணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:
உணவுப் பொருள்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், வேளாண் உற்பத்தி பொருள்கள், விமான உதிரி பாகங்கள் ஆகியவற்றை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. இது, அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த 1955-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நட்புறவு ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். எனவே, மனித நேய அடிப்படையில்,  ஈரானிய மக்களின் உயிருக்கும், பயணிகளின் பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்கும் தடையை அமெரிக்கா விலக்கிக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஐ.நா. சர்வதேச நீதிமன்றம், உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளை தீர்த்து வைத்து வருகிறது. 
இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உறுப்பு நாடுகள் கட்டுப்பட வேண்டும். ஆனால், மேல்முறையீடு செய்ய முடியாது. அதே சமயம், இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான நடைமுறை எதுவும் ஐ.நா. நீதிமன்றத்திடம் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com