சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்களின் கலாசாரமாக வேண்டும்: பிரதமர் மோடி

சுற்றுச்சூழலை பாதுகாப்பது மக்கள் கலாசாரத்தின் ஓர் அங்கமாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்  ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸிடம் இருந்து ஐ.நா. சுற்றுச் சூழல் விருதைப் பெற்றுக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்  ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸிடம் இருந்து ஐ.நா. சுற்றுச் சூழல் விருதைப் பெற்றுக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி.

சுற்றுச்சூழலை பாதுகாப்பது மக்கள் கலாசாரத்தின் ஓர் அங்கமாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழி நடத்துவதற்காகவும், வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்போம் என்று உறுதியேற்றதற்காகவும், பிரதமர் மோடிக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டது.
ஐ.நா. சாம்பியன்ஸ் ஆஃப் எர்த் (புவி சாதனையாளர்) என்ற பெயரிலான அந்த விருதை தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் ஆகியோருக்கு ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியா குட்டெரெஸ் வழங்கி கெளரவித்தார்.
சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றியதற்காகவும், சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண துணிச்சலாகவும், புதுமையாகவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டதற்காகவும் அவர்களுக்கு இந்த கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
பாரம்பரியமாகவே, இயற்கையை வணங்குவது இந்திய சமூகத்தின் ஓர் அங்கமாக எப்போதும் இருந்து வருகிறது. இந்தியர்கள், இயற்கையை உயிருள்ள ஒன்றாகக் கருதி வருகிறார்கள்.
பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர், மக்களின் கலாசாரம் ஆகிய மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்த கவலைகள் மக்கள் கலாசாரத்தின் ஓர் அங்கமாக மாற வேண்டும். இல்லாவிட்டால், இயற்கைப் பேரிடரை தவிர்ப்பது சிரமமாகி விடும்.
வனப்பகுதியில் வாழும் பழங்குடியினர், தங்கள் உயிரைக் காட்டிலும் மரங்களின் மீது அதிக மரியாதை வைத்திருக்கிறார்கள். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்குத் தேவையான மீன்களை மட்டுமே பிடிக்கிறார்கள். விவசாயிகள், பருவ காலத்துக்கு ஏற்ப பயிர் செய்கிறார்கள். இந்தியப் பெண்கள், மரங்களை தெய்வமாக வணங்குகிறார்கள். இந்த நேரத்தில் எனக்கு அளிக்கப்பட்ட இந்த விருதினை, அவர்களுக்கு வழங்கப்படும் கெளரவமாகக் கருதுகிறேன்.
வேளாண் துறை, தொழில் துறை முதல் வீடுகள் கட்டுவது, கழிப்பறைகள் கட்டுவது வரை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் எனது தலைமையிலான அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. 
அடுத்த 2 ஆண்டுகளில் கரியமில வாயு வெளியேற்றத்தை 20 முதல் 25 சதவீதம் வரை குறைப்பதற்கு மத்திய அரசு பணியாற்றி வருகிறது. 
மேலும், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை 30 முதல் 35 சதவீதம் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com