ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் வழங்கிய ஒப்பந்தம் ரத்து: சிப்காட் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிக்கு  நிலம் ஒதுக்கியதை ரத்து செய்த சிப்காட் உத்தரவுக்கு  இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிக்கு  நிலம் ஒதுக்கியதை ரத்து செய்த சிப்காட் உத்தரவுக்கு  இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு: 
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்படும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை விரிவாக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதற்கான நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு கேட்டு சிப்காட் நிறுவனத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது.
விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட சிப்காட் நிர்வாகம், 342.22 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு ஒதுக்கியது.  இதற்குரிய கட்டணம் அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது. நில ஒதுக்கீடு தொடர்பாக ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கும், சிப்காட் நிர்வாகத்துக்கும் இடையே குத்தகை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு  சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு வழங்கிய 342.22 ஏக்கர் நில குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்து சிப்காட் தலைவர் 2018  மே மாதத்தில் உத்தரவிட்டுள்ளார். குத்தகை முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள போது அதை ரத்து செய்ய சிப்காட் நிர்வாகத்துக்கு அதிகாரம் கிடையாது.
எனவே 342.22 ஏக்கர் நிலம் குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்து சிப்காட் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் ஸ்டெர்லைட் நிறுவனம் வசமுள்ள 342.22 ஏக்கர் நிலத்தில் சிப்காட் தலையிடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்,  "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தில் 13 பேர் இறந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு ஸ்டெர்லைட்  ஆலைக்கு நிலம் ஒதுக்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இது தமிழக அரசின் கொள்கை முடிவு' என்று வாதிட்டார்.  
இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்,  "ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் குத்தகைக்கு வழங்கப்பட்டதில் முறையான அனுமதி பெற்று அதற்கான முழுத்தொகையும் செலுத்தப்பட்டு விட்டது. மேலும் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்தது சட்ட விரோதம்.  எனவே சிப்காட் உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும்' என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி,  நில குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்த சிப்காட் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, இதுதொடர்பாக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com