சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய ஆராய்ச்சிகள் தேவை: பிரதமர் வலியுறுத்தல்

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான புதிய ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய ஆராய்ச்சிகள் தேவை: பிரதமர் வலியுறுத்தல்

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான புதிய ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அடிப்படைத் தேவைகளைக் காட்டிலும் ஆடம்பரமும், பேராசையும் மனிதனை ஆட்கொண்டதன் விளைவாகவே அழிவை நோக்கி இயற்கை சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றியதற்காக, பிரதமர் மோடிக்கு ஐ.நா. விருது வழங்கப்பட்டது. ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அவ்விருதை அவருக்கு வழங்கினார். 
இந்நிலையில், சுற்றுச்சூழல் தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்த சில தகவல்கள் நாளிதழ்களில் வியாழக்கிழமை வெளியாகின. அதில் பிரதமர் கூறியதாக குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
மனித குலத்துக்கும், இயற்கைக்கும் மிகப்பெரிய பிணைப்பும், பந்தமும் உள்ளது. அதனை எவராலும் மறுதலிக்க முடியாது. ஆற்றங்கரைகளில்தான் மனித நாகரிகமே தோன்றியது. இயற்கையை விடுத்து ஒருபோதும் நம்மால் உயிர்வாழ முடியாது.
ஆனால், அத்தகைய மகத்துவம் வாய்ந்த இயற்கையை நாம் போற்றிப் பாதுகாக்கிறோமா? என்பது கேள்விக்குறி. தற்போது மனிதனின் பேராசைக்கும், தேவைக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துவிட்டது. அதன் காரணமாகவே சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அதை உணர்ந்து செயல்பட வேண்டிய உச்சகட்ட தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம். இயற்கையோடு இயைந்து வாழும் நிலையை மீண்டும் கட்டமைக்க வேண்டும். அது நமக்கு மட்டும் நன்மை பயக்காது. வருங்கால தலைமுறை வளமுறவும் அது வழிவகுக்கும்.
அதைக் கருத்தில்கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து நிறைய பேச வேண்டும்; எழுத வேண்டும்; சிந்திக்க வேண்டும்; அதோடு மட்டுமன்றி புதிய ஆராய்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் மேற்கொள்ள வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் பருவநிலை மாற்றம் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசுகின்றன. அந்த கவலை இந்தியாவுக்கு அதிகமாகவே உள்ளது. மறுபுறம், பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் எளிய மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையும் உள்ளது.
அதனால்தான் "பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுவர்களுக்கு உரிய நீதி' (கிளைமேட் ஜஸ்டிஸ்) கிடைக்கச் செய்ய வேண்டும் என்று உலக நாடுகளிடையே இந்தியா வலியுறுத்தி வருகிறது.
ஐ.நா. சுற்றுச்சூழல் விருது கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. அதேவேளையில், அதை எனக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட பாராட்டு பட்டயமாக எண்ணவில்லை. மாறாக புறவெளியை பாதுகாக்க வேண்டும் என்ற நற்சிந்தனையையும், இயற்கையோடு இரண்டறக் கலந்து வாழ வேண்டும் என்ற உணர்வையும் கொண்டிருக்கும் இந்தியர்களின் மாண்புக்கு கிடைத்த கெளரவமாக கருதுகிறேன் என அந்த நாளிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com