குஜராத் அரசு ராஜிநாமா செய்ய வேண்டும்: ஷரத் யாதவ் காட்டம் 

வெளி மாநில தொழிலாளர்கள் வெளியேற்ற விவகாரத்தில் குஜராத் அரசு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று லோக்தந்த்ரிக் ஜனதா தள கட்சியின் நிறுவனர் ஷரத் யாதவ் தெரிவித்துள்ளார். 
குஜராத் அரசு ராஜிநாமா செய்ய வேண்டும்: ஷரத் யாதவ் காட்டம் 

புது தில்லி: வெளி மாநில தொழிலாளர்கள் வெளியேற்ற விவகாரத்தில் குஜராத் அரசு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று லோக்தந்த்ரிக் ஜனதா தள கட்சியின் நிறுவனர் ஷரத் யாதவ் தெரிவித்துள்ளார். 

குஜராத் மாநிலத்தில் பிகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், கட்டுமானப் பணிகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், சபர்கந்தா மாவட்டத்தில் சிறுமி ஒருவரை, பிகாரைச் சேர்ந்தவர் கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வெளி மாநிலத்தவரை மோசமாக சித்திரித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஹிந்தி பேசும் தொழிலாளர்கள் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உள்ளூர் மக்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி ஆயிரக் கணக்கானோர் தங்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். 20,000-க்கும் மேற்பட்டோர் இதுவரை வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் வெளி மாநில தொழிலாளர்கள் வெளியேற்ற விவகாரத்தில் குஜராத் அரசு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று லோக்தந்த்ரிக் ஜனதா தள கட்சியின் நிறுவனர்   ஷரத் யாதவ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிவ் கூறியுள்ளதாவது:

நடைபெற்றுள்ள சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் பிற மாநில மக்களுக்கு குறிப்பாக ஹிந்தி பேசும் மாநில மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க குஜராத் அரசு தவறி விட்டது. எனவே இந்த அரசு ராஜிநாமா செய்ய வேண்டும்.

இந்த மக்கள் கடந்த பல் வருடங்களாக குஜராத் மாநிலத்திற்கு தங்கள் சேவைகளை வழங்கி வந்திருக்கின்றனர். மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் உள்ளது.  ஆனாலும் தொழிலாளர்களை பாதுகாக்க முடியவில்லை. 

தற்போது நிகழ்ந்துள்ள இந்த தொழிலாளார்கள் வெளியேற்றமானது பாஜக அரசு என்பது சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது அல்ல என்பதைக் காட்டுகிறது. இது நாட்டின் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி. 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com