டிட்லி புயல்: ஆந்திரத்தில் 8 பேர் பலி

வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிஸா-ஆந்திரம் இடையே வியாழக்கிழமை கரையை கடந்தது. இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பால் ஆந்திர மாநிலத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் நகரின் பருவா கிராமத்தில் டிட்லி புயலால் வேரோடு சாய்ந்த மரங்களைக் கடந்து பாதுகாப்பான இடத்துக்கு தங்களது உடைமைகளுடன் செல்லும் மக்கள்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் நகரின் பருவா கிராமத்தில் டிட்லி புயலால் வேரோடு சாய்ந்த மரங்களைக் கடந்து பாதுகாப்பான இடத்துக்கு தங்களது உடைமைகளுடன் செல்லும் மக்கள்.


வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிஸா-ஆந்திரம் இடையே வியாழக்கிழமை கரையை கடந்தது. இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பால் ஆந்திர மாநிலத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆந்திரத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மைக் குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாநிலத்தின் கடலோர பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் கனமழை பெய்ததால் அந்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பலத்த காற்று வீசியதால் மரம் விழுந்தும், வீடு இடிந்து விழுந்தும் இருவர் உயிரிழந்தனர். கடலுக்குள் சென்ற மீனவர்கள் 6 பேர் உயிரிழந்தனர். கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 65 படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. அவற்றில் பெரும்பாலான படகுகள் மீட்கப்பட்டன.
ஸ்ரீகாகுளம், விஜயநகர மாவட்டங்கள் இந்த புயலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசியதால் 2000 மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. 4, 319 கிராமங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து அந்த சாலையில் பாதிக்கப்பட்டது. ரயில் தண்டவாளங்களில் மரங்கள் விழுந்தும், மின் கம்பிகள் அறுந்தும் கிடப்பதால் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில விரைவு ரயில்கள் மட்டும் வேறு தடத்தில் மாற்றி விடப்பட்டன. நெல், தோட்டப் பயிர்கள், தென்னை, வாழை தோப்புகள் உள்பட அனைத்தும் சேதமடைந்தன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

: டிட்லி புயலால் ஒடிஸா மாநிலத்தில் எவ்வித உயிரிழப்பும் இல்லை என்று அந்த மாநில அரசு தெரிவித்தது. இதுகுறித்து சிறப்பு நிவாரண குழு ஆணையர் பி.பி. சேத்தி கூறுகையில், மாநிலத்தின் பல இடங்களில் நிலச்சரிவு, மரங்கள் வேரோடு சாய்ந்ததால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல குடிசைகள் இடிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்ததால் பல கிராமங்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தொலைத் தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டன. பலத்த மழையால் கஞ்சம், கஜபதி, குர்டா, புரி உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. அந்த மாவட்டங்களின் தாழ்வான பகுதிகளில் இருந்த 3 லட்சம் மக்கள் 1, 112 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில் தண்டவாளங்களில் மரங்கள் விழுந்தும், மின் கம்பிகள் அறுந்தும் கிடப்பதால் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்வர் நவீன் பட்நாயக்கின் அறிவுறுத்தலின்படி, விரைவில் மாநிலத்தை பழைய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நாங்கள் பயந்ததை விட சேதம் குறைவாகத்தான் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதனிடையே, இந்த புயலால் மேற்கு வங்க மாநிலத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஒடிஸா-ஆந்திர எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை கவிழ்ந்து கிடக்கும் கன்டெய்னர் லாரிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com