நீதிபதிகள் விடுப்பில் செல்ல புதிய கட்டுப்பாடு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி

நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில், அவற்றுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் ஒன்றாக வேலைநாள்களில் நீதிபதிகள் விடுப்பில் செல்வதற்கு கட்டுப்பாடு விதித்து

நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில், அவற்றுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் ஒன்றாக வேலைநாள்களில் நீதிபதிகள் விடுப்பில் செல்வதற்கு கட்டுப்பாடு விதித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
 உச்சநீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த 3-ஆம் தேதி பொறுப்பேற்ற ரஞ்சன் கோகோய், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், விசாரணை நீதிமன்றங்களில் சுமார் 3 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு தீர்வு காணும் வகையில் புதிய நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக சில நாள்களிலேயே சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
 விடுப்பு கட்டுப்பாட்டுகள்: அதன் ஒரு பகுதியாக, அடுத்த ஒரு வாரத்திலேயே உயர் நீதிமன்றங்களின் கொலீஜிய உறுப்பினர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது, விடுப்பு தொடர்பான புதிய கட்டுப்பாடுகளுக்கு இணங்கிச் செயல்படாத நீதிபதிகளிடம் இருந்து, நீதிமன்றப் பணிகளை திரும்பப் பெறுமாறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
 மேலும், அத்தகைய நீதிபதிகள் குறித்து கட்டாயம் தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் தனிப்பட்ட முறையில் அவர்களைக் கையாளும் என்று கூறியுள்ளார்.
 உயர்நீதிமன்ற மற்றும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு, அவசர சூழ்நிலை அல்லாத பட்சத்தில் வேலை நாள்களின்போது விடுப்புக்கான அனுமதி அளிக்கக் கூடாது என்று ரஞ்சன் கோகோய் அறிவுறுத்தியுள்ளார். மேலும், வேலை நாள்களில் கருத்தரங்கம் மற்றும் இதர அலுவல் சார் நிகழ்ச்சிகளில் நீதிபதிகள் பங்கேற்பதற்கும் ரஞ்சன் கோகோய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
 குடும்பத்துடன் விடுப்பில் செல்ல திட்டமிடும் நீதிபதிகள் அதை முன்கூட்டியே திட்டமிடவும், விடுப்புக்கான சாதக வாய்ப்புகளை அறிய சக நீதிபதிகளுடனும், தலைமை நீதிபதியுடனும் கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 கண்காணிப்பு: கீழமை நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகள் கண்காணிப்பு தற்போது காலாண்டு அடிப்படையில் நடைபெற்று வரும் நிலையில், அதை தினமும் கண்காணிக்க ரஞ்சன் கோகோய் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அதற்கான வாய்ப்புகள் குறித்து சக நீதிபதிகளுடன் தாம் ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
 உயர் நீதிமன்ற நிலுவை வழக்குகளை குறைக்கும் முயற்சியாக, நீண்டகாலத்துக்கு நடவடிக்கையற்று இருக்கும் வழக்குகளை களையெடுக்க தலைமை நீதிபதிகளை ரஞ்சன் கோகோய் கேட்டுக்கொண்டுள்ளார். அடுத்த நடவடிக்கையாக, கிரிமினல் வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்களால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நபர்கள், தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை அடையாளம் காண அறிவுறுத்தியுள்ளார்.
 அவற்றில் 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக நிலுவையில் இருக்கும் மனுக்களை உடனடியாக விசாரித்து தீர்ப்பளிக்கவும், அப்பிரிவில் வரும் வழக்குகள் குறித்த விவரங்களை தனக்கு அனுப்புமாறும் ரஞ்சன் கோகோய் கேட்டுள்ளார்.
 நீதிபதிகள் நியமனம்: அடுத்தகட்டமாக, நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடத்தை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்ற கொலீஜியம் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 நீதிபதிகள் தேர்வின்போது தகுதியான நபரை தேர்வு செய்யுமாறும், இதர செல்வாக்குகளை கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் ரஞ்சன் கோகோய் அறிவுறுத்தியுள்ளார்.
 உயர்நீதிமன்ற கொலீஜியக் குழுவினருடனான காணொலிக் காட்சி கலந்தாலோசனையை அடுத்து, புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல் கடிதத்தையும் அனைத்து நீதிமன்றங்களுக்கும் அவர் அனுப்பியுள்ளார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com