எம்.ஜே. அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: உண்மைத்தன்மையை ஆராய அமித் ஷா வலியுறுத்தல்

மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் நிலையில் தாம் இல்லை எனத் தெரிவித்துள்ள

மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் நிலையில் தாம் இல்லை எனத் தெரிவித்துள்ள பாஜக தலைவர் அமித் ஷா, இந்த விவகாரத்தில் உண்மைத்தன்மையை ஆராய்வது அவசியம் என்று கூறியுள்ளார்.
 வெளியுறவுத் துறை விவகாரங்களுக்கான இணையமைச்சர் எம்.ஜே. அக்பர், இதற்கு முன்னர் பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
 ஊடகத் துறையில் அவர் தீவிரமாக இயங்கியபோது பெண் பத்திரிகையாளர்கள் பலருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை எம்.ஜே. அக்பர் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
 "மீ டூ' என்ற தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சுட்டுரை வாயிலாக பகிர்ந்து வருகின்றனர்.
 அண்மையில் நடிகைகள் தனு ஸ்ரீ தத்தா, கங்கனா ராவத் ஆகியோர் திரைத் துறையில் தாங்கள் எதிர்கொண்ட சில கசப்பான அனுபவங்களை அதில் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 அந்த வரிசையில், பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது அத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
 அக்பரின் தலைமையில் பணியாற்றியபோது அவரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இது கடும் விமர்சனங்களுக்கு வித்திட்டது.
 இதையடுத்து மத்திய அமைச்சர் பதவியில் இருந்து எம்.ஜே.அக்பர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
 இந்தச் சூழலில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அமித் ஷா பேட்டியளித்தபோது அவரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
 சமூக வலைதளங்களில் யார் மீது வேண்டுமானாலும் குற்றம்சாட்டி கருத்துகளைத் தெரிவிக்க முடியும். அவ்வாறாக, பலர் மீது அவதூறும் பரப்பப்படுகிறது. எனவே, எம்.ஜே. அக்பர் விவகாரத்தில் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்க இயலாது.
 அவருக்கு எதிராக குற்றச்சாட்டை வைத்திருக்கும் நபர் இதுபோன்ற புகார்களை முக்கிய பிரமுகர்கள் மீது முன்வைப்பதை வாடிக்கையாகக் கொண்டவரா? என்பதை பார்க்க வேண்டும்.
 அக்பருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையையும் ஆராய வேண்டும். அதில் குற்றங்கள் நிரூபணமானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமித் ஷா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com