காங்கிரஸின் கலவர முயற்சி போலீஸாரால் முறியடிப்பு: குஜராத் துணை முதல்வர்

குஜராத்தில் வெளிமாநிலத்தவர்களுக்கு எதிராக குறிப்பாக ஹிந்தி பேசுபவர்கள் மீது தாக்குதல் நடத்தி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னெடுத்த முயற்சியை போலீஸாரும், மக்களும் இணைந்து
காங்கிரஸின் கலவர முயற்சி போலீஸாரால் முறியடிப்பு: குஜராத் துணை முதல்வர்

குஜராத்தில் வெளிமாநிலத்தவர்களுக்கு எதிராக குறிப்பாக ஹிந்தி பேசுபவர்கள் மீது தாக்குதல் நடத்தி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னெடுத்த முயற்சியை போலீஸாரும், மக்களும் இணைந்து முறியடித்தனர் என்று அந்த மாநில துணை முதல்வர் நிதின் படேல் தெரிவித்தார்.
 சபர்கந்தா மாவட்டத்தில் 14 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிகாரைச் சேர்ந்த நபரை கடந்த மாதம் 28-ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
 இதையடுத்து, ஹிந்தி பேசுபவர்கள் அந்த மாநிலத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று அச்சுறுத்தியதுடன் தாக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டனர். அச்சத்தால் தங்கள் சொந்த மாநிலத்துக்கு ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
 இதனால், பல்வேறு தொழில் துறையில் போதிய ஆட்கள் இல்லாமல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் செய்தியாளர்களை நிதின் படேல் சனிக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 காங்கிரஸ் எம்எல்ஏ அல்பேஷ் தாக்குர், அவருடைய சத்திரிய தாக்குர் சேனை அமைப்பினர் வன்முறையைத் தூண்டினர்.
 இதுதொடர்பாக அவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகளும் பதிவு செய்யப்பட்டன. குஜராத்தில் ஒரு வித பதற்றமான சூழலை இவர்கள் ஏற்படுத்திவிட்டனர். மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
 சமூக வலைதளங்களில் ஹிந்தி பேசும் மக்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுப்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ் எடுத்த முயற்சியை போலீஸாரும், மக்களும் முறியடித்துவிட்டனர்.
 வெளிமாநிலத்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய மாநிலம் குஜராத். தேசிய ஒற்றுமையில் குஜராத் நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸýடன் சிலர் கைகோத்துக் கொண்டு செயல்படுகின்றனர். குஜராத்தை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் மாநிலத்துக்கு திரும்பி வருகின்றனர். வளர்ச்சிக்கான முன்மாதிரி மாநிலம் குஜராத். வேளாண் துறையும் சிறப்பாக உள்ளது.
 இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் சர்தார் வல்லபபாய் படேலுக்கு குஜராத்தில் அமைக்கப்படும் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுவது முற்றிலும் தவறானது. உலகிலேயே மிகப் பெரிய சிலை படேலின் சிலையாக இருக்கப்போகிறது. 182 மீட்டர் (சுமார் 597 அடி உயரம்) உயர சிலையானது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.
 இந்திய நிறுவனமான லார்சன்-டௌப்ரோ தயாரித்துள்ளது. அதற்கு தேவையான மூலப் பொருள்களும் நமது நாட்டிலிருந்து பெறப்பட்டவையாகும்.
 இதை காங்கிரஸ் கட்சியால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. காரணம், நாடு சுதந்திரம் பெறுவதற்காக காங்கிரஸ் குடும்பத்தினர் மட்டுமே போராடியதாக இந்த உலகம் நம்ப வேண்டும் என்று அக்கட்சி விரும்புகிறது.
 சுதந்திரத்துக்காக பாடுபட்ட சர்தார் வல்லபபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சட்ட மேதை அம்பேத்கர் ஆகியோரை காங்கிரஸ் புறக்கணித்தது என்றார் நிதின் படேல்.
 படேல் சிலையை பிரதமர் மோடி இம்மாதம் 31-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com