குவாஹாட்டி வெடிவிபத்தில் 4 பேர் காயம்: உல்ஃபா தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் ஏற்பட்ட சக்தி குறைந்த வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்ததாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். அஸ்ஸாமில் வெளியான

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் ஏற்பட்ட சக்தி குறைந்த வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்ததாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். அஸ்ஸாமில் வெளியான தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வெடிவிபத்து சம்பவத்தை அரங்கேற்றியதாக தடை செய்யப்பட்ட உல்ஃபா தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.
 சம்பவ இடத்தை பார்வையிட்ட பின் அஸ்ஸாம் காவல்துறை தலைவர் (டிஜிபி) குலதார் சாய்கியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: குவாஹாட்டி சந்தைப் பகுதியில் உள்ள நடைபாதையில் கொட்டி வைக்கப்பட்டிருந்த கட்டிட கட்டுமானப் பொருட்களை அப்புறப்படுத்தும் போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு சக்தி குறைந்த வெடிகுண்டு சனிக்கிழமை காலை 11.45 மணியளவில் திடீரென வெடித்தது. இதனால் அவ்வழியே சென்ற ஒரு பெண் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
 வெடிவிபத்துக்கு காரணமான வெடிகுண்டு எந்த ரகத்தை சேர்ந்தது என்பதும், இந்த வெடிவிபத்துடன் தீவிரவாதக் குழுக்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணையின் முடிவில் தான் தெரிய வரும் என்று அவர் தெரிவித்தார்.
 இந்நிலையில், இந்த வெடிவிபத்துக்கு உல்ஃபா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அந்த அமைப்பு தகவல் அனுப்பியது பின்னர் தெரிய வந்தது. அஸ்ஸாமில் சமீபத்தில் வெளியான தேசிய குடிமக்கள் பதிவேட்டில் அண்டை நாட்டில் இருந்து அஸ்ஸாமில் குடியேறியவர்களின் 40 லட்சம் பெயர்களை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் வெடிவிபத்து நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 முன்னதாக, சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய துணை ஆணையர் ரஞ்சன் பூயான் கூறுகையில், இது குண்டு வெடிப்புச் சம்பவம் அல்ல. சாதாரண வெடிவிபத்து தான். கற்கள் சிதறியதால் சிலர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார் அவர்.
 காயமடைந்த 4 நபர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
 இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் சித்தார்த்த பட்டாச்சார்யா கூறுகையில், "வெடிவிபத்து நடைபெற்ற இடத்தில் தடயவியல் குழு புலனாய்வு நடத்தி வெடித்தது உண்மையில் வெடிகுண்டு தானா அல்லது வேறு ஏதாவது சாதனமா என்பதையும் ஆய்வு நடத்தி வருகிறது.
 வெடிவிபத்துக்கு உல்ஃபா தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் (உல்ஃபா தீவிரவாதிகள்) மக்கள் முன்னிலையில் இச்செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதால் என்ன பயன்? இதை சரியென யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தற்போது அஸ்ஸாமில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறைந்து, அமைதியான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்கள் அமைதியை குலைக்க முயல்கின்றனர். சண்டையிடும் சூழ்நிலைகளால் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா? என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com