"தேர்தலைப் புறக்கணியுங்கள்': சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் பிரசாரம்

சத்தீஸ்கர் மாநிலத்தில், மக்கள் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென, தடைவிதிக்கப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கம் சுவரொட்டிகள் மூலம் பிரசாரம் செய்து வருவதாகக்

சத்தீஸ்கர் மாநிலத்தில், மக்கள் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென, தடைவிதிக்கப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கம் சுவரொட்டிகள் மூலம் பிரசாரம் செய்து வருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 இது குறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது:
 நக்ஸல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிஜப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களில், சுவரொட்டிகள் மூலமாகவும், துண்டுபிரசுரங்கள் மூலமாகவும் மாவோயிஸ்டுகள் மக்களிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 அந்தப் பிரசுரங்களில், "எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணியுங்கள்; உங்களிடம் வாக்கு சேகரிக்க வரும் அரசியல்வாதிகளை "மக்கள் நீதிமன்றத்துக்கு' அழைத்து வாருங்கள். அங்கு, அவர்களுக்கு வாக்களிப்பதா? வேண்டாமா? என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். அதே வேளையில், பாஜக சார்பாக வாக்கு சேகரிக்க வருபவர்களை விரட்டியடியுங்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும், நக்ஸலைட்டுகள் தேர்தலைப் புறக்கணித்ததுடன், மக்களையும் தேர்தலைப் புறக்கணிக்க வற்புறுத்தியும், மிரட்டியும் வருகின்றனர். ஆனால், காவல் துறையின் சார்பாக, பழங்குடியின குக்கிராமங்களில், மக்களுக்கு நம்பிக்கையும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பஸ்தர் மாவட்டத்தில் தங்கியுள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
 வழக்கமாக தேர்தல் சமயங்களில், அரசியல் கட்சிகள் இப்பகுதிகளில் வாக்கு சேகரிக்க செல்வதில்லை. நகர்ப்புற மற்றும் முக்கிய கிராமப்புறப் பகுதிகளில் மட்டுமே அவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். கடந்த 2008-ஆம் ஆண்டு, இப்பகுதிக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற 2 பாஜக நிர்வாகிகளை, மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்று கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com