நதி நீர் பகிர்வு: சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு

தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிடையே நிலவி வரும் நதி நீர் பகிர்வு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது
நதி நீர் பகிர்வு: சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு

தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிடையே நிலவி வரும் நதி நீர் பகிர்வு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நதிநீர்ப் படுகை மேலாண்மைச் சட்ட மசோதா வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தபட இருக்கிறது.
 தமிழ்நாடு-கர்நாடகம் இடையிலான காவிரி நதிநீர் பகிர்வு பிரச்னை உள்பட நாட்டின் மொத்தம் 13 நதிகளின் நீர் பகிர்வு தொடர்பாக பல்வேறு மாநிலங்கள் இடையே பல ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
 புதிய சட்ட மசோதா: நதி நீர் பகிர்வு பிரச்னை என்பது மாநிலங்கள் இடையிலான நல்லுறவுக்கு இடையூறு ஏற்படுத்தும் பிரச்னையாகவும் சில நேரங்களில் உருவெடுக்கிறது. முக்கியமாக கோடை காலத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக கடைமடைப் பகுதியில் உள்ள மாநிலங்கள் நதி நீர் கிடைக்காமல் திண்டாடும் நிலை உள்ளது. இது, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இடையே பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இவை அனைத்துக்கும் விரைவில் தீர்வுகாணும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளது.
 விரைவில் தீர்வு கிடைக்கும்: இதன்படி, நதி வாரியங்கள் சட்டம் -1956-க்கு பதிலாக இந்த நதி நீர்ப் படுகை மேலாண்மை சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் கொண்டு வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் காவிரி பிரச்னை உள்பட நாட்டில் உள்ள பல்வேறு நதிநீர் பங்கீடு பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
 முதல்வர்கள் பேச்சு நடத்துவர்: இச்சட்டப்படி மொத்தம் 13 நதிநீர் படுகை ஆணையங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆணையத்திலும் ஒரு நிர்வாகக் குழு மற்றும் ஒரு அமல்படுத்தும் வாரியமும் இருக்கும். நிர்வாகக் குழுவில் நதிநீர் பகிர்வில் தொடர்புடைய மாநிலங்களின் முதல்வர்கள் இடம் பெறுவார்கள். மேலும், நதிநீர் பங்கீடு குறித்து மாநில முதல்வர்கள் ஆண்டுக்கு இருமுறை சந்தித்துப் பேச்சு நடத்துவார்கள்.
 சட்டத்தின் பயன்: காவிரி, கங்கை, சிந்து, பிரம்மபுத்திரா-பராக், மகாநதி, கிருஷ்ணா, தபதி, பிராமணி- பைத்ரனி உள்ளிட்ட முக்கிய நதிகளின் நீர்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இந்த மேலாண்மைச் சட்டம் இயற்றப்பட இருக்கிறது. நதிநீர் பகிர்வு மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட நதி பாயும் இடங்களில் உள்ள நிலத்தடி நீர், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள், நதிப் படுகை பாதுகாப்பு, கழிவு நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளை ஆய்வு செய்து தீர்வுகாணவும் புதிய சட்டம் உதவிகரமாக இருக்கும்.
 தமிழ்நாட்டில் ஜீவாதார நதியாக காவிரி உள்ளது. 19 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், 10 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும், 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும், 12 லட்சம் விவசாயத் தொழிலாளர்களின் வருவாய் ஆதாரமாகவும் காவிரி திகழ்ந்து வருகிறது. எனவே, இந்த புதிய சட்டம் மூலம் தமிழ்நாட்டுக்கு எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 நதிகள் இணைப்புத் திட்டங்கள்: ஏற்கெனவே இந்த ஆண்டு இறுதிக்குள், கோதாவரி - காவிரி, கென் - பேட்வா, லதீஸ்தா - ஃபரக்கா, நர்மதை - தபதி, தமன் கங்கை - பிஞ்சல் ஆகிய 5 நதிகள் இணைப்புத் திட்டத்தை முதல்கட்டமாக முன்னெடுக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
 தென்மாநிலங்களுக்கு...: இது தவிர, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களும் பயன்பெறும் வகையில் ஒரு புதிய நதிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஏற்கெனவே முன்னுரிமை அளித்து வருகிறது. அதன்படி, மகாராஷ்டிரத்தில் பாயும் இந்திராவதி ஆற்றின் உபரி நீர், தெலுங்கானாவில் உள்ள காலேஸ்வரம் அணைக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து இரு அணைகள் வழியாக அந்த நீர், காவிரியுடன் இணைக்கப்படும்.
 இதேபோல், போலாவரம் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர், கிருஷ்ணா நதியுடன் இணைக்கப்படும். பிறகு, அந்த நீர், அங்கிருந்து கர்நாடகத்தில் உள்ள பெண்ணையாற்றுக்கு கொண்டு செல்லப்படும். அதைத் தொடர்ந்து, மீண்டும் காவிரியுடன் அந்த நீர் வழித்தடம் இணைக்கப்படும். இதனால், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னைக்கு கிட்டத்தட்ட தீர்வு கிடைத்துவிடும்.
 கோதாவரி ஆற்றில் பாயும் 3,000 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதேபோல், இந்திராவதி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரும் வீணாகிறது. அவற்றை ஒருங்கிணைத்து, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பயன்பெறும் வகையில் நதிநீர் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com