கச்சா எண்ணெய்: டாலருக்கு பதில் ரூபாய்; ஏற்றுமதி நாடுகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்

கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும்போது அதற்கான தொகையை அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் பெறுவதற்கு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று
கச்சா எண்ணெய்: டாலருக்கு பதில் ரூபாய்; ஏற்றுமதி நாடுகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்

கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும்போது அதற்கான தொகையை அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் பெறுவதற்கு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவடைந்து வரும் நிலையில், இத்தகைய கோரிக்கையை பிரதமர் முன்வைத்திருப்பது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
பன்னாட்டு மற்றும் உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் எண்ணெய் ஏற்றுமதி நிறுவனத் தலைவர்கள் மட்டுமன்றி, சவூதி அரேபிய எண்ணெய் வளத் துறை அமைச்சர் காலித் ஏ அல் ஃபாலிஹ், ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
அதில் பேசிய பிரதமர் மோடி, கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். இதைக் கருத்தில் கொண்டு எண்ணெய் உற்பத்தி நாடுகள் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில் சில ஆலோசனைகளையும் பிரதமர் அப்போது தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாகவே நாட்டின் பொருளாதாரச் சூழலில் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. உள்நாட்டு செலாவணியின் மதிப்பு சரிந்ததும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை விகிதம் அதிகரித்ததும் அதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் கடுமையாக உயர்ந்தது இந்தியா முழுவதும் எதிர் விளைவுகளை உண்டாக்கியது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் நாட்டின் சாமானிய மக்கள் வரை எதிரொலித்து வருகின்றன.
உலக அளவில் கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடாக இந்தியா விளங்குகிறது. கடந்த நிதியாண்டில் (2017-18) மட்டும் ரூ.5.9 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோலியத் தேவைக்கு ஐக்கிய அரபு அமீரக நாடுகளை நம்பியே நமது இருப்பதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசால் வரிக் குறைப்பைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலவில்லை.
இந்நிலையில், இந்தியா மற்றும் சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் வருடாந்திர ஆலோசனைக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதில் பேசிய மோடி, கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியா எதிர்கொண்டு வரும் சவால்களையும், சங்கடங்களையும் விளக்கிக் கூறினார். மேலும், இந்த நிலை தொடர்ந்தால், அது சர்வதேச பொருளாதாரச் சூழலையும் பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டது. அதில் மோடி பேசியதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
எரிபொருள் பயன்பாட்டை தாரளமயமாக்கவும், அனைத்து இடங்களிலும் எரிவாயு கிடைப்பதற்கும் மத்திய அரசு பல்வேறு கொள்கைகளை வகுத்துள்ளது.
இதைத் தவிர, மீத்தேன் வாயு கண்டறியும் பணிகளும், பிற வகையான எரிபொருள் வளங்களை ஆய்வு செய்யும் பணிகளையும் அரசு முடுக்கிவிட்டுள்ளது.
எண்ணெய் வளமிக்க நாடுகள் மட்டுமே எரிபொருள் சந்தையில் முக்கிய சக்திகளாக விளங்குகின்றன. எரிபொருளின் விலை, தரம், அளவு உள்ளிட்டவற்றை அந்நாடுகளே தீர்மானிக்கின்றன. வேறு எந்த துறைகளிலும் இந்த நடைமுறை இல்லை. இதில் தவறு எதுவும் இல்லை.
இருப்பினும், எண்ணெய் வளமிக்க நாடுகள் சர்வதேச பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு செயல்படுவது அவசியம். பெட்ரோலியப் பொருள்களை உற்பத்தி செய்பவர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையே உறவு நீடிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் நுகர்வோரின் தேவைகளையும், அவர்களது நுகர்வுத் திறனையும் உற்பத்தியாளர்கள் அறிந்து கொள்ள இயலும்.
இந்தியாவைப் பொருத்தவரை அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. அதன் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டால்கூட அது இங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பணம் செலுத்துவதற்கான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும். குறிப்பாக, உள்நாட்டு செலாவணியை பாதிக்காத வகையில் அதில் சில விதிகளை எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள் மாற்றியமைக்க வேண்டும்.
அதேபோன்று உபரியாக உள்ள கச்சா எண்ணெய்யை வளர்ந்து வரும் நாடுகளுக்கு பயனளிக்கும் வகையில் விநியோகிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளின் விலை, தரம், அளவு உள்ளிட்டவற்றை எண்ணெய் வளமிக்க நாடுகளே தீர்மானிக்கின்றன. வேறு எந்த துறைகளிலும் இந்த நடைமுறை இல்லை. எண்ணெய் வளமிக்க நாடுகள் சர்வதேச பொருளாதாரச் சூழலை கருத்தில் கொண்டு செயல்படுவது அவசியம்.


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com