உள்நாட்டு பாதுகாப்பில் ஒத்துழைப்பு: இந்தியா-சீனா இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து

உள்நாட்டு பாதுகாப்பில் ஒத்துழைப்பு அளிப்பதற்காக, இந்தியா-சீனா இடையே வரும் 22-ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உள்நாட்டு பாதுகாப்பில் ஒத்துழைப்பு அளிப்பதற்காக, இந்தியா-சீனா இடையே வரும் 22-ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்ததாவது:
சீன பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஜாவோ கேஷி வரும் 22-ஆம் தேதி இந்தியா வரவுள்ளார். அப்போது, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசும் அவர், இரு நாடுகளின் உள்நாட்டு பாதுகாப்பில் ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பான பல்வேறு விவகாரங்களை விவாதிக்க உள்ளார். 
மேலும், அது தொடர்பான ஒப்பந்தத்திலும் இருவரும் கையெழுத்திட உள்ளனர்.
இரு நாடுகளுக்குமிடையே இது போன்ற ஒப்பந்தம் கையெழுத்தாவது, இதுவே முதல் முறையாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இரு நாடுகளும் நுண்ணறிவுப் பிரிவின் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல், பாதுகாப்புத்துறையின் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், பேரழிவுகளைத் தடுக்க இணைந்து பணியாற்றுதல் போன்றவற்றில் ஈடுபட உள்ளன.
இந்த ஒப்பந்தமானது, இரு நாடுகளுக்கிடையே நிலவும் நல்லுறவை மேலும் அதிகரிக்க உதவும். இத்துடன், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தமும் எதிர்காலத்தில் கையெழுத்தாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது வரை, கைதிகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தமும், குறிப்பிட்ட நபர்களை நாடுகடத்துவது தொடர்பான ஒப்பந்தமும் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-சீனா இடையே டோக்கா லாம் எல்லை விவகாரம் தொடர்பாக பிரச்னை எழுந்து ஓராண்டு மட்டுமே ஆகியுள்ள நிலையில், இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு ஏற்பட்டு, அதனை வலிமைப்படுத்த இரு நாடுகளும் தொடர்ந்து முயன்று வருவது, இரு நாட்டு மக்களிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com