எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2,000 பேர் உளவுப் பிரிவுக்கு மாற்றம்

எல்லைப் பாதுகாப்பு படையில் போர் இல்லா படைப்பிரிவில் பணிபுரிந்த 2,000 பேர், நுண்ணறிவு பிரிவுக்கு (ஐ.பி.) மாற்றப்பட்டுள்ளனர். 


எல்லைப் பாதுகாப்பு படையில் போர் இல்லா படைப்பிரிவில் பணிபுரிந்த 2,000 பேர், நுண்ணறிவு பிரிவுக்கு (ஐ.பி.) மாற்றப்பட்டுள்ளனர். 
சீனா, நேபாளம், மியான்மர், பூடான் உள்ளிட்ட நாடுகளின் எல்லையோரங்களில் உளவுப் பணியை மேற்கொண்டு வரும் ஐ.பி.யின் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பு படையில், சஹாஸ்த்ரா சீமா பல் (எஸ்.எஸ்.பி.) என்ற படைப்பிரிவு செயல்பட்டு வருகிறது. அதில் 24 பட்டாலியன்கள் இயங்கி வந்தன. அதல் தற்போது 19 பட்டாளியன்கள் ஐ.பி. பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 12-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் நகல் தங்கள் பார்வைக்கு கிடைக்கப்பெற்றதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. அந்த உத்தரவில் எஸ்.எஸ்.பி. படைப்பிரிவைச் சேர்ந்த 2,104 பேர் ஐ.பி.க்கு உடனடியாக மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 5 பட்டாலியன்களைச் சேர்ந்த 94 பணியாளர்கள் மட்டும் தொடர்ந்து அதே பணியில் நீடிப்பர்.
எஸ்.எஸ்.பி. படையில் இருந்து செல்லும் பணியாளர்கள், ஐ.பி.யில் அவர்களது பணி நிலைக்கு தொடர்புடைய இடங்களில் பணியமர்த்தப்படுவர் என்றும் உள்துறை அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி மாறுதல் ஏன்?: எஸ்.எஸ்.பி. என்பது 1963-இல், சீனப் போருக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட படைப் பிரிவாகும். அந்த அமைப்பு போர் நடவடிக்கைகளில் பங்கேற்காது. எல்லையோரப் பகுதிகளில் பொதுமக்களிடம் தேசப் பக்தியை வளர்த்தெடுப்பதே அவர்களது பிரதான பணியாகும். இந்தப் படைப் பிரிவில் ஆண், பெண் என இருபாலரும் உண்டு.
இந்தச் சூழலில் கடந்த 2001-இல் ஆயுதப் படைப் பிரிவாக எஸ்.எஸ்.பி. மாற்றப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பணியாளர்கள் சிவில் பணிகளை மட்டுமே செய்பவர்கள் என்பதால் அவர்களை போர் நடவடிக்கைகளில் இணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், எஸ்.எஸ்.பி. படைப்பிரிவு கிட்டத்திட்ட செயலற்ற அமைப்பாகக் கருதப்பட்டது.
அஜித் தோவல் பரிந்துரை: அதேசமயம், எஸ்.எஸ்.பி. படையின் பணியாளர்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், எல்லையோரப் பகுதிகளில் உளவுத் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தலாம் என்று கடந்த 2016 ஜூனில் அப்போதைய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷிக்கு, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடிதம் எழுதியிருந்தார். அது பரிசீலனையில் இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போதைய உள்துறைச் செயலாளர் ராஜீவ் கெளபா மற்றும் எஸ்.எஸ்.பி. படையின் இயக்குநர் எஸ்.எஸ்.தேவால் ஆகியோர் இந்த மாத தொடக்கத்தில் ஆலோசனை நடத்தியபோது, எஸ்.எஸ்.பி. பணியாளர்களை ஐ.பி.க்கு மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவுக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததையடுத்து தற்போது பணிமாறுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com