சபரிமலையில் பெண்கள் வழிபாடு: நம்பிக்கைதான் அடிப்படை!

பல நீதிபதிகள் அடங்கிய அமர்வில், பெரும்பான்மையான நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை ஒரு நீதிபதி மட்டும் வழங்கும் போதெல்லாம்,
சபரிமலையில் பெண்கள் வழிபாடு: நம்பிக்கைதான் அடிப்படை!

பல நீதிபதிகள் அடங்கிய அமர்வில், பெரும்பான்மையான நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை ஒரு நீதிபதி மட்டும் வழங்கும் போதெல்லாம், அது இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் நீதித்துறையின் மேம்பாட்டுக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் மாறுபட்ட தீர்ப்பும் தனிச்சிறப்பு வாய்ந்ததுதான். 
அதில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வரக் கூடாது என்று கூறுவது ஆழ்ந்த மத நம்பிக்கையுடன் தொடர்புடையது. இந்த விஷயத்தை ஆண், பெண் பாகுபாடு என்ற நோக்கில் அணுகக் கூடாது என்று அவர் தெரிவித்திருந்தார்.
மதம் சார்ந்த விஷயங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் பெரும்பாலும் அரசமைப்புச் சட்டமா? அல்லது மதம் சார்ந்த நம்பிக்கைகளா?; மனு தாக்கல் செய்பவர்கள் மதநம்பிக்கை உள்ளவர்களா? அல்லது கடவுள் மறுப்பாளர்களா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்துகின்றன.
அரசமைப்புச் சட்டப்படி, முக்கிய விஷயங்களில் நீதிமன்றங்கள் எடுக்கும் முடிவே இறுதியாக உள்ளது. உடனடியாக மறுபரிசீலனை என்பதற்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு, லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்குப் பெரும் வருத்தத்தையும், வேதனையையும் அளிப்பதாக உள்ளது. ஏனெனில், இது அவர்கள் தொன்று தொட்டு பின்பற்றி வந்த நம்பிக்கைகளுக்கு எதிராக அமைந்திருக்கிறது.
இதுபோன்ற நேரத்தில் மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள்தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒருவர் பணத்தை இழந்தால், அது சிறிய அளவிலான இழப்புதான். அதனை மீண்டும் சம்பாதித்துக் கொள்ள முடியும். ஒரு நல்ல நண்பரை இழந்தால் அது சற்று கடினமானது. அதே நேரத்தில், நம்பிக்கையை இழப்பது என்பது அனைத்தையும் இழப்பதற்கு சமமாகும். 
இது தொடர்பான சுவாமி விவேகானந்தரின் கருத்து மிகச்சிறப்பானது. எந்த ஒரு மனிதரின் நம்பிக்கையையும் குலைக்கும் வகையில் நாம் செயல்படக் கூடாது. முடிந்தால் அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மட்டுமே செயல்பட வேண்டும்.
ஒருவரை அவர் இருக்கும் இடத்தில் இருந்து அடுத்த நிலைக்கு உயர்த்தவே நாம் முயற்சிக்க வேண்டுமே தவிர, பின்னோக்கி இழுத்துவிடக் கூடாது என்பதே விவேகானந்தரின் கூற்றாகும்.
மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் எந்த மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிப்பது பொருத்தமானதாக இருக்காது. சட்டத்தின் மூலம் ஒழிப்பதற்கு சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கம்போல சமூகத் தீங்கு ஒன்றும் இப்போது நடைமுறையில் இல்லை. சம உரிமைப் பிரச்னை அத்தகையதும் அல்ல. பல கோடி பக்தர்களின் நம்பிக்கை என்பது நீதிமன்றங்களின் வரையறைக்குள் வராது. அரசமைப்புச் சட்டத்தின் 25-ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள மதவழிபாட்டு உரிமையை, சம உரிமை என்ற பெயரில் புறந்தள்ளிவிட முடியாது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வழிபடக் கூடாது என்பது ஹிந்துக்களின் பல ஆண்டுகால நம்பிக்கையாகும். இதுபோன்ற ஆழ்ந்த மதம் சார்ந்த நம்பிக்கைகளில் பொதுவான நியாயங்களை கண்ணை மூடிக்கொண்டு அமல்படுத்த முடியாது. மதம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த அமைப்புகளின் முடிவுகளுக்கு இதனைவிட வேண்டும்.
இந்த விஷயத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டு கேரள நீதிமன்றம் கூறியதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. இதில், நமது நாட்டில் அனைத்து வழிபாட்டு இடங்களிலும் பெண்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், சபரிமலையில் உரிய காரணத்துக்காகவே சில கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பிட்ட வயது பெண்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில்தான் இந்த நடைமுறை உள்ளதே தவிர, அவர்கள் பெண்கள் என்பதால் கோயிலுக்கு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்று அந்தத் தீர்ப்பில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.
கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்புடன் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் என்ன நடந்துள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்கள் யாரும், அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. வேறு யாரோ சிலர் தாக்கல் செய்த பொதுநல மனுவின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்னையை விவாதிக்க முற்பட்டது. அந்தப் பொதுநல மனுவை விசாரித்துத்தான் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துத் தோல்வி அடைந்தவர்களைப் புறந்தள்ளிவிட்டு, வேறு யாரோ சிலர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது.
இந்த விஷயத்தில் கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்பதே எனது கருத்து. இந்த விஷயத்தை ஏன் 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கக் கூடாது?. ஏற்கெனவே, நீதிமன்றத்தில் இதுபோன்ற 13 நீதிபதிகள் அமர்வு கேசவானந்த பாரதி உள்ளிட்ட சில வழக்குகளை விசாரித்துள்ளது. இல்லையென்றால், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த விஷயம் தொடர்பாக கேரளத்தில் உள்ள ஐயப்ப பக்தர்களின் கருத்தை ஊடகங்களின் மூலம் ஆய்வு நடத்த வேண்டும். இதன் மூலம் நீதித்துறையில் ஒரு புதிய முன்னுதாரணமாவது ஏற்படும்.
இந்த விஷயத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜாக்சன், ஹோல்ம்ஸ் ஆகியோரின் கருத்தையும் மேற்கோள் காட்ட வேண்டியுள்ளது. நாங்கள் கூறுவது இறுதியான தீர்ப்பு அல்ல; நாங்களும் தவறுகள் செய்யக் கூடியவர்கள்தான்; எல்லையில்லாத விஷயத்தின் மீது நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் - என்பதே நான் இறக்கும் தருவாயில் எனது கடைசி வார்த்தையாக இருக்கும் என்பதுதான் அவை.


கட்டுரையாளர்
முன்னாள் நீதிபதி கே. நாராயண குரூப்.
(சென்னை உயர் நீதிமன்றத்தில் தாற்காலிக தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com