பலமிக்க தலைமையே நாட்டின் தேவை

மாபெரும் வளர்ச்சி மற்றும் விரைவாக முடிவெடுக்கும் நிலை ஆகியவை தொடர வேண்டுமெனில், பலமிக்க, உறுதியான தலைமை மத்தியில் நீடிப்பது அவசியம் என்று
பலமிக்க தலைமையே நாட்டின் தேவை


மாபெரும் வளர்ச்சி மற்றும் விரைவாக முடிவெடுக்கும் நிலை ஆகியவை தொடர வேண்டுமெனில், பலமிக்க, உறுதியான தலைமை மத்தியில் நீடிப்பது அவசியம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதற்கு ஏற்ப நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.
வர்த்தக கூட்டமைப்புகளின் தலைமை முகமான அசோசெம் அமைப்பின் மாநாட்டில், காணொலி காட்சி மூலமாக அருண் ஜேட்லி செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 
மாபெரும் வளர்ச்சிக்கான இந்த இலக்கு தொடர வேண்டுமெனில், வேகமான வளர்ச்சி, பெரிய அளவிலான வருவாய்கள், அதிகமான வளங்கள் உள்ளிட்டவை தொடர வேண்டுமெனில், சிறப்பான உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டுமெனில், பலமான, உறுதிமிக்க தலைமை நாட்டில் நீடிப்பது அவசியமாகும்.
உள்கட்டமைப்புகளுக்கு கடன் வழங்கும் அமைப்பான ஐ.எல்&எஃப்.எஸ் பிரச்னைகளை சந்தித்தபோது, தற்போதைய அரசு மேற்கொண்டதைப் போன்ற நடவடிக்கையை, பலவீனமான தலைமை (முந்தைய அரசு) மேற்கொள்ளத் தவறிவிட்டது. அந்நிறுவனத்துக்கான பிரச்னைகளைக் கையாளும் வகையிலான தலைமை மாற்றத்தை தற்போதைய அரசு உடனடியாக மேற்கொண்டது. (கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக், ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவன வாரியத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டதை குறிப்பிட்டார்).
உயர்ந்த இடங்களைஆக்கிரமிக்க துடிக்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் நிலையற்ற கூட்டணி ஆகியோரால் அரசியல் ரீதியான சவால்களை நாடு எதிர்கொண்டுள்ளது.
ஆக, இன்றைய இந்தியாவுக்கு, கொள்கைகளை புரிந்து கொள்ள இயலாத, திசைகளை அறியாத நபர்கள் தேவையில்லை. வெற்றிக்கான திசைகளை நன்கு அறிந்த தலைமையும், அரசுமே இன்றைய தேவை. அதைத்தான், உலகில் இனிமையான வாய்ப்பு என்று சர்வதேச செலாவணி நிதியம் வர்ணிக்கிறது. அந்த இனிமையான வாய்ப்பை அடுத்த 20 ஆண்டுகளுக்கு நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியா மாபெரும் வளர்ச்சி பாதையில் தொடர்ந்து பயணிக்குமெனில், வறுமையில் இருந்து இந்நாடு விடுபடுவதுடன், வல்லரசு நாடாகவும் உருவெடுக்க முடியும்.
சில நாடுகளின் உள்நாட்டுக் கொள்கை முடிவுகள், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகின்றன. ஆனால், அந்த தாக்கம் என்பது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என நம்புகிறேன். ஒரு வளரும் பொருளாதார சக்தி என்ற வகையில் அதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை...: செயற்கையாக ஏற்படுத்தப்படும் தட்டுப்பாடு காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து காணப்படுகிறது. அதனால், இந்தியாவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.
ஆகவே, நமது பொருளாதாரத்தை பலப்படுத்துவதன் மூலமாக, அந்த சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். அதற்கான திறன் நம்மிடம் உள்ளது என்றார் ஜேட்லி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com