மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?: மத்திய அரசுக்கு சிவசேனை கண்டனம்

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு சிவசேனை கட்சி


பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு சிவசேனை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவு, உடை, தங்குமிடம் அளிக்கப்படுவதற்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. இதேபோல், நாட்டை நேர்மையான நாடாக மாற்றுவோம் என்றும் தெரிவித்திருந்தது.
ஆனால், பெண்களிடம் மோசமாக நடந்து கொள்ளும் நபர்கள், மத்திய அமைச்சரவையில் தற்போது அங்கம் வகிக்கின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, வீட்டுக்கு வந்து நேரிடையாக மதுபானம் விநியோகிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி எதையும் அளிக்கவில்லை. அப்படியிருக்கையில் மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக அரசால், வீட்டில் நேரிடையாக மதுபானத்தை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மது விற்பனையை ஆன்லைன் மூலம் மேற்கொள்வது என்றும், வீட்டில் நேரிடையாக மதுபானம் விநியோகிப்பது என்றும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், போலி மதுபானம் ஆகியவற்றுக்கு முடிவு கட்டுவதற்கு இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என மகாராஷ்டிர அரசு குறிப்பிட்டுள்ளது. வீட்டில் மதுபானத்தை குடித்தபிறகு, வாகனத்தை அந்த நபர் ஓட்டிச் செல்ல மாட்டார் என்பதில் என்ன நிச்சயம் உள்ளது?
இந்த முடிவால், மகாராஷ்டிர அரசுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது தெரியவில்லை. இருப்பினும், மதுபான தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டபிறகே, இந்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தேர்தலுக்கு நிதி வசூலிக்கும் பாஜகவின் திட்டம் தற்போது வெளிப்பட்டு விட்டது. பாஜகவின் உண்மையான முகத்தை இந்தத் திட்டம் அம்பலப்படுத்தி விட்டது.
மக்களின் நலன் கருதி, வீட்டில் பொருட்களை நேரடியாக விநியோகிக்க வேண்டும் என்று அரசு கருதும்பட்சத்தில், கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனம், மக்களுக்கான குடிநீர், உணவு ஆகியவற்றை வீட்டுக்கு சென்று வழங்க வேண்டும் என்று அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com