வளர்ந்து வரும் நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவு தொடரும்: ஐ.நா.சபையில் கனிமொழி எம்.பி. பேச்சு

நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய, வளர்ந்து வரும் நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டு வரும் நல்லுறவு
ஐ.நா. சபையில் பேசுகிறார் கனிமொழி
ஐ.நா. சபையில் பேசுகிறார் கனிமொழி


நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய, வளர்ந்து வரும் நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டு வரும் நல்லுறவு தொடரும் என ஐக்கிய நாடுகள்(ஐ.நா.) சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையின் நிலையான வளர்ச்சிக்கான சிறப்புக் கூட்டத்தில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் அடங்கிய 2030 திட்ட அறிக்கையை இந்தியா இறுதி செய்து வருகிறது. அதில், பெரும்பாலான இலக்குகள் ஐ.நா.வின் வளர்ச்சி இலக்குகளோடு ஒன்றிணையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம், நாட்டு மக்களின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நல்லுறவு தொடரும்: நிலையான வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களையும், ஏழைகளையும், பிற்படுத்தப்பட்டோரையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். மேலும், நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய, வளர்ந்து வரும் நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டு வரும் நல்லுறவு தொடரும். இந்திய நாடானது, உலகின் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. மக்களுக்கான நிலையான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. அதனைக் கருத்தில் கொண்டே, திட்ட அறிக்கையை இந்தியா உருவாக்கி வருகிறது. அதனை, இந்திய நாட்டின் வளர்ச்சித் திட்டங்களைப் பரிந்துரைக்கும், மத்திய கொள்கைக் குழு(நீதி ஆயோக்) மேற்பார்வையிட உள்ளது.
தரவரிசைப் பட்டியல்: அந்தத் திட்டங்களுள் முக்கியமாக சுகாதாரம், கல்வி, நீர் மேலாண்மை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளன. அத்திட்டங்களை நிறைவேற்ற, மாநிலங்களுக்கு நிதியும், சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகையும் அளிக்கப்பட உள்ளன.
இதன் மூலம், சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாநிலங்களின் செயல்பாடு ஒப்பீடு செய்யப்படும். இது மாநிலங்களிடையே போட்டி மனப்பான்மையை உருவாக்கி, மேலும் சிறப்பாகச் செயலாற்ற உதவும். ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டங்களில் சீர்திருத்தம் மேற்கொள்ள இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும். மேலும், நிலையான வளர்ச்சித் திட்டங்களில், பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைக்கவும், அதனைத் தடுக்கவும் தேவையான திட்டங்களுக்கு முக்கிய இடம் தரப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com