அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்குத் தகுந்த சட்டம் கொண்டுவர வேண்டும்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஏதுவாக மத்திய அரசு தகுந்த சட்டம் இயற்ற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்குத் தகுந்த சட்டம் கொண்டுவர வேண்டும்


அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஏதுவாக மத்திய அரசு தகுந்த சட்டம் இயற்ற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார்.
தஸரா பண்டிகையையொட்டி, மகாராஷ்டிர மாநிலம், நாகபுரிலுள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தொண்டர்களிடையே உரையாற்றிய மோகன் பாகவத் தெரிவித்ததாவது:
ராமர் கோயிலுக்கு சட்டம்: ராமர் பிறந்த இடமான அயோத்தியில், ஹிந்து கோயில் இருந்தது பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த இடத்தில் புதிய கோயிலைக் கட்டுவதற்கு அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. சில அடிப்படைவாதிகள் அயோத்தி பிரச்னையை வைத்து, அரசியல் நடத்தி வருகின்றனர். 
நீதிமன்றத்தில் இந்தப் பிரச்னை விசாரணையில் இருந்தாலும், விசாரணைக்குப் பல இடையூறுகளை அவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், அந்த இடத்தில் கோயில் கட்டுவது தாமதமாகி வருகிறது. நம்முடைய சுய-மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள அந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டியது அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு கோயில் கட்டுவதற்கு ஏதுவாக, தகுந்த சட்டத்தினை இயற்ற வேண்டும்.
ஹிந்துக்களின் நம்பிக்கை: சபரிமலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், ஹிந்து மக்களின் நம்பிக்கைகள் மட்டுமே தொடர்ந்து ஆபத்தைச் சந்தித்து வருகின்றன. இதனாலேயே மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். சபரிமலை தீர்ப்பு சமூகத்தில் அமைதியின்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தியுள்ளது. 
அந்த வழக்கின் விசாரணையின் போது, ஹிந்து மக்கள், கோயில் நிர்வாகம் உள்ளிட்ட பலரின் வாதங்களை நீதிபதிகள் கருத்தில் கொள்ளாமல் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதுவே அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாகும்.
வெறுப்பினைப் பரப்புகின்றனர்: நாட்டின் பல்வேறு பகுதிகளில், நகர நக்ஸல்வாதம் அதிகரித்து வருகிறது. நாட்டுக்கு எதிரான கொள்கை கொண்டவர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் மக்களிடையே தவறான செய்திகளையும், அரசுக்கு எதிரான வெறுப்பினையும் பரப்பி வருகின்றனர். 
நாட்டு மக்களிடையே தீய எண்ணங்களை உருவாக்கி, அரசுக்கு எதிராக அவர்களைத் திருப்பி, தங்களைப் பின்தொடர்பவர்களைக் கொண்டு, ஆட்சியமைக்க அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
ராணுவ சீர்திருத்தங்கள் தேவை: நாட்டின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். சில அண்டை நாடுகளில், ஆட்சி மாறியிருந்தபோதும் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் இன்னும் குறையவில்லை. எனவே, ராணுவத்தை மேலும் பலப்படுத்துவதும், ராணுவ நடவடிக்கைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதும் அவசியமாகும்.
மேலும், உள்நாட்டு ராணுவத்தளவாடங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதே வேளையில், அண்டை நாடுகளுடனான நல்லுறவையும் மேம்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com