ஆதார் அடிப்படையிலான சிம் கார்டுகள் செயலிழப்பா?: மத்திய அரசு விளக்கம்

ஆதார் விவரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட செல்லிடப்பேசி சிம் கார்டுகள் விரைவில் செயலிழக்க உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவை
ஆதார் அடிப்படையிலான சிம் கார்டுகள் செயலிழப்பா?: மத்திய அரசு விளக்கம்


ஆதார் விவரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட செல்லிடப்பேசி சிம் கார்டுகள் விரைவில் செயலிழக்க உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை விளக்கமளித்துள்ளது. அத்தகைய பொய்யான தகவல்களை செல்லிடப்பேசி பயன்பாட்டாளர்கள் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளது.
பல்வேறு சமூக நலத் திட்டங்களின் கீழ் உதவிகள் பெற ஆதாரைக் கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டது. வங்கிக் கணக்கு தொடங்கவும், செல்லிடப்பேசி சிம் கார்டு இணைப்புக்கும் ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இது மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும், தனிநபர் சுதந்திரத்துக்குப் புறம்பான நடவடிக்கை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக, பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, ஆதார் சட்டப்படி செல்லும் என தீர்ப்பளித்தது. அதேவேளையில், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், சிம் கார்டு பெறவும் ஆதார் கட்டாயம் இல்லை என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், ஏற்கெனவே ஆதார் அடிப்படையில் பெறப்பட்ட 50 கோடி சிம் கார்டுகள் இனி செயல்படாது என்ற ஊகத் தகவல்கள் கடந்த சில நாள்களாக பரவி வந்தன. இது, சம்பந்தப்பட்ட பயன்பாட்டாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்த விவகாரத்தை தெளிவுபடுத்தும் வகையில் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) மற்றும் மத்திய தொலைத் தொடர்புத் துறை ஆகியவை இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வியாழக்கிழமை வெளியிட்டன. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
புதிதாக சிம் கார்டுகள் வாங்குவதற்கு ஆதார் கட்டாயமில்லை என்றுதான் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மாறாக, ஏற்கெனவே ஆதார் ஆவணங்களை சமர்ப்பித்துசிம் கார்டு பெற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்த உத்தரவும் வெளியாகவில்லை. எனவே, அதுதொடர்பாக வரும் ஊகத் தகவல்களை நம்ப வேண்டாம்.
தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் தங்களது ஆதார் விவரங்கள் இருக்கக் கூடாது என வாடிக்கையாளர்கள் விரும்பினால், மாற்று ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு, ஏற்கெனவே அளித்த ஆதார் தகவல்களை அவர்கள் நீக்கிக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com