கிரீஸ், போர்ச்சுகல் பிரதமர்களுடன் வெங்கய்ய நாயுடு சந்திப்பு

கிரீஸ் மற்றும் போர்ச்சுகல் நாடுகளின் பிரதமர்களை, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்புகளின்போது,
கிரீஸ், போர்ச்சுகல் பிரதமர்களுடன் வெங்கய்ய நாயுடு சந்திப்பு


கிரீஸ் மற்றும் போர்ச்சுகல் நாடுகளின் பிரதமர்களை, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்புகளின்போது, அந்த நாடுகளுடனான நல்லுறவை அதிகரிப்பது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
12-ஆவது ஆசியா-ஐரோப்பா சந்திப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக, வெங்கய்ய நாயுடு ஐரோப்பா சென்றுள்ளார். இதனிடையே, கிரீஸ் நாட்டுப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் மற்றும் போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோரை வியாழக்கிழமை அவர் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியா-கிரீஸ்: கிரீஸ் பிரதமருடனான சந்திப்பின்போது, அந்த நாட்டின் பொருளாதார நிலை குறித்து, வெங்கய்ய நாயுடுவிடம் சிப்ரஸ் எடுத்துரைத்தார். மேலும், இந்திய நிறுவனங்கள் கிரீஸ் நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதனிடையே, ஐ.நா. பாதுகாப்பு குழுவில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளித்ததற்கு, சிப்ரஸிடம் நாயுடு நன்றி தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளிடையே சுற்றுலா மேம்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பொருளாதார மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்பு மூலம் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை அதிகரிக்க, இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி பூண்டனர். 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கிரீஸ் நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும், நாயுடுவிடம் சிப்ரஸ் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியா-போர்ச்சுகல்: பின்னர், போர்ச்சுகல் பிரதமர் கோஸ்டாவைச் சந்தித்த நாயுடு, காந்தியடிகளின் 150-ஆவது பிறந்ததின விழாவை உலக அளவில் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குழுவில் இணைந்ததற்காகவும், ஐ.நா. பாதுகாப்பு குழுவில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளித்ததற்காகவும், கோஸ்டாவுக்கு நாயுடு நன்றி தெரிவித்தார்.
இந்தியாவுடனான நல்லுறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கோஸ்டா, போர்ச்சுகல் நிறுவனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி, அடிப்படைக் கட்டமைப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற எண்ணற்ற வாய்ப்புகள் இருப்பதாக நாயுடு தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com