சபரிமலை: உச்ச நீதிமன்றத்தை அணுக தேவஸ்வம் போர்டு முடிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மாநில அரசு முடிவெடுத்ததைத்
சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, சந்நிதானம் அருகே உள்ள நடைப்பந்தல் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்.
சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, சந்நிதானம் அருகே உள்ள நடைப்பந்தல் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்.


சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மாநில அரசு முடிவெடுத்ததைத் தொடர்ந்து, சபரிமலையிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்ததையடுத்து, ஹிந்து அமைப்புகளும், காங்கிரஸ், பாஜக ஆகிய எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரளம் மட்டுமன்றி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில், சபரிமலை கோயிலின் நடை கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது. அப்போது முதலே பம்பை, நிலக்கல், எருமேலி என பாதை நெடுகிலும் பக்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, சபரிமலை கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்ட 2 பெண்கள், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.
கேரள அரசு விளக்கம்: இதுதொடர்பாக மாநில தேவஸ்வம் அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், சபரிமலைக்கு வந்த 2 பெண்களில், ஒருவர் சமூக செயல்பாட்டாளர் என்று தெரியவந்துள்ளது. சபரிமலை புனிதமான இடம். அது, சமூக செயல்பாட்டாளர்களின் வலுவை காட்டும் இடமல்ல. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும்; சமூக செயல்பாட்டாளர்களுக்கு அல்ல. சபரிமலைக்கு வந்த அந்த பெண்களின் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்றார்.
தேவஸ்வம் போர்டு முடிவு: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த, மாநில அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து, சபரிமலையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் நிலவும் பதற்றமான சூழல் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக அந்த கோயிலை நிர்வகிக்கும் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதன் தலைவர் பத்மகுமார் கூறுகையில், சபரிமலை நிலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும். தற்போது நிலவும் பிரச்னையை தீர்க்கும் நோக்குடன் இதேபோன்ற அறிக்கை கொச்சி உயர் நீதிமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்யப்படும். பதற்றத்தை தணிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தேவஸ்வம் போர்டு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படுமா? என்ற கேள்விக்கு, தற்போது நிலுவையில் உள்ள அனைத்து மறு ஆய்வு மனுக்களிலும் பதில்மனுதாரராக தேவஸ்வம் போர்டு உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் கூடாது என்றார்.
ஆளுநருடன் சந்திப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரளம் முழுவதும் கடந்த சில தினங்களாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக ஆளுநர் சதாசிவத்தை, காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) லோக்நாத் பெஹேரா வெள்ளிக்கிழமை சந்தித்து விளக்கமளித்தார்.
அப்போது, சபரிமலையில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது; உண்மையான பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸார் தயாராக உள்ளனர். பக்தர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்படுகிறது என்று ஆளுநரிடம் டிஜிபி தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு: இதனிடையே, சபரிமலை கோயிலுக்கு பெண்ணுரிமை ஆர்வலர்கள் வருவதற்கு ஆதரவாக மாநில அரசு செயல்படுவதாக பாஜகவும், காங்கிரஸும் குற்றம்சாட்டியுள்ளன.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், சபரிமலை கோயிலுக்கு உண்மையான பக்தர்கள் அழைத்து வரப்படுகின்றனரா? என்ற சந்தேகம் எழுகிறது. பெண்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்வது அதிரடிப் படை நடவடிக்கை போல் இருக்கக் கூடாது என்றார்.
இதேபோல், சபரிமலைக்கு அழைத்து வரப்பட்ட 2 பெண்களில் ஒருவருக்கு போலீஸார் தங்களது சீருடையையும், தலைக்கவசத்தையும் அளித்தது ஏன்? என்று மாநில பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை கேள்வியெழுப்பியுள்ளார். 
144 தடை நீட்டிப்பு: இதனிடையே, சபரிமலை கோயில் வளாகம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு, அக்டோபர் 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பி அனுப்பப்பட்ட 2 பெண்கள்
ஹைதராபாதைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவிதா ஜக்கல், கொச்சியைச் சேர்ந்த பெண்ணுரிமை ஆர்வலர் ரெஹானா பாத்திமா என 2 இளம்பெண்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை சபரிமலையை அடைந்தனர். எனினும், பதினெட்டு படிகள் அருகேயுள்ள நடைப்பந்தல் பகுதியில் திரண்ட ஏராளமான பக்தர்கள், அந்த பெண்களை தடுத்து நிறுத்தினர். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சரண கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயில் ஊழியர்களும் பதினெட்டு படிகளில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் இரு பெண்களையும் சந்நிதானத்துக்கு அழைத்து வந்தால், கோயில் நடை பூட்டப்படும் என்று தந்திரி எச்சரித்தார். மேலும், போலீஸ் படையை பயன்படுத்தி, சன்னிதானத்துக்கு இரு பெண்களையும் அழைத்துச் செல்ல விரும்பவில்லை என்று மாநில அரசும் தெரிவித்தது. இதையடுத்து, இரு பெண்களிடமும் பேசிய போலீஸார், நிலைமையை எடுத்துரைத்து, அவர்களை திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனை ஏற்றுக் கொண்ட பெண்கள், அங்கிருந்து திரும்பினர். இதையறிந்த பக்தர்கள், சரண கோஷங்களை எழுப்பியபடி ஆரவாரம் செய்தனர்.

சபரிமலை கோயிலுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பத்திரிகையாளர் கவிதா ஜக்கல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com