ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

அமெரிக்காவில் ஹெச்-1பி விசா நடைமுறையில் வரும் ஜனவரி மாதத்துக்குள் மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு


அமெரிக்காவில் ஹெச்-1பி விசா நடைமுறையில் வரும் ஜனவரி மாதத்துக்குள் மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கும், சிறு- குறு ஒப்பந்த நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், ஹெச்-1பி விசா அடிப்படையில் தாற்காலிகமாக தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விசா நடைமுறையில் மிகப்பெரிய அளவில் ôற்றங்களைக் கொண்டு வருவதற்கு டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை இரு தினங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தும்போது, அவர்களுக்கான சிறப்பு பணிகள் என்ன? என்பதை குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் துறை மறு வரையறை செய்வதற்குத் திட்டமிட்டுள்ளது. 
அந்தத் துறை, தனது பரிந்துரைகளை ஜனவரி மாதத்துக்குள் அளிக்கும். இந்தப் பரிந்துரையை அமல்படுத்துவதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து திறமையானவர்களை தேர்ந்தெடுத்து பணிகளில் அமர்த்த முடியும். மேலும், அமெரிக்க தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பும், நல்ல ஊதியமும் கிடைக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், சிறு-குறு ஒப்பந்தப் பணிகள் நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். அமெரிக்காவில் உள்ள சிறு-குறு ஒப்பந்தப் பணிகள் நிறுவனங்களில் பெரும்பாலானவை இந்தியர்களுக்குச் சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஹெச்-4 விசா திட்டத்தையும் ரத்து செய்வதற்கு டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 
அமெரிக்காவில் ஹெச்-1பி விசா அடிப்படையில் பணியாற்றும் வெளிநாட்டினர், தங்களது மனைவி அல்லது கணவரை ஹெச்-4 விசா அடிப்படையில் அமெரிக்காவுக்கு அழைத்து வரலாம். அவர்களும் அமெரிக்காவில் பணியாற்றலாம். இந்தத் திட்டத்தை முந்தைய ஒபாமா அரசு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான இந்தியப் பெண்கள் உள்பட 70,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஹெச்-4 விசா திட்டத்தை ரத்து செய்வதற்கு டிரம்ப் நிர்வாகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு தொழில் துறையினரும், நாடாளுமன்ற எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம், இந்த விவகாரத்தை டிரம்ப் நிர்வாகத்திடம் கொண்டு சென்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com