காவலர்களின் சிறந்த சேவையினால் தான் நாட்டில் அமைதி பரவி இருக்கிறது - பிரதமர் பாராட்டு

காவலர்களின் சிறந்த சேவையினால் தான் நாட்டில் அமைதி பரவி இருக்கிறது என காவலர்கள் வீரவணக்க தினத்தில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். 
காவலர்களின் சிறந்த சேவையினால் தான் நாட்டில் அமைதி பரவி இருக்கிறது - பிரதமர் பாராட்டு

காவலர்களின் சிறந்த சேவையினால் தான் நாட்டில் அமைதி பரவி இருக்கிறது என காவலர்கள் வீரவணக்க தினத்தில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். 

ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர்கள் வீரவணக்க தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1959-ஆம் ஆண்டு லடக் பகுதியில் சீனப் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில்10 மத்திய காவல் படை அதிகாரிகள் வீரமரணம் அடைந்தனர். இதை நினைவுகூரும் வகையிலேயே இந்த தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இதை முன்னிட்டு இதுவரை வீரமரணம் அடைந்த 34,800 காவலர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னம் தில்லி சானக்யாபுரி பகுதியில் எழுப்பப்பட்டுள்ளது. இது 30 அடி உயரம், 238 டன் எடை கொண்டதாகும். வீரமரணம் அடைந்த காவலர்களை கௌரவிப்பதற்காக நிறுவப்பட்ட இந்த நினைவுச் சின்னத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். இத்துடன் தேசிய காவலர் அருங்காட்சியகத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். 

இதையடுத்து, அந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, "சமூகத்தில் அமைதியை சீர்குலைக்க நினைப்பவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிவதற்கு உங்களுடைய செயல்பாடுகளே காரணம். தேசத்தில் பாதுகாப்பின்மை மற்றும் அச்சத்தை உண்டாக்கும் முயற்சிகள் உங்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய சேவையினால் தான் நாட்டில் அமைதி பரவி இருக்கிறது. 

பயங்கரவாதத்துக்கு எதிராக சண்டையிடும் காவலர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்டி வரும் காவலர்கள் அனைவரையும் நினைவுகூரவேண்டிய தினம் இது. நக்ஸல் பாதிக்கப்பட்ட இடங்களில் பணியில் இருக்கும் காவலர்கள் சிறந்த சேவையை செய்து வருகின்றனர். அவர்களால் தான் நக்ஸல்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை குறைந்து, இளைஞர்கள் பொதுதளத்துக்கு வருகின்றனர்" என்றார். 

இந்த நிகழ்வில் மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் கிரென் ரிஜூஜூ மற்றும் ஹன்ஸ்ராம் ஜி அஹிர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய ஆயுதப்படை போலீஸார் உட்பட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com