அமிருதசரஸ் ரயில் விபத்து: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் அருகே வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட ரயில் விபத்து தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
அமிருதசரஸ் ரயில் விபத்து: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் அருகே வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட ரயில் விபத்து தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
 அமிருதசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் தசரா பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை இரவு ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதைக் காண்பதற்கு ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களில் பலர், அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்று, ராவண வதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் 61 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 இந்நிலையில் முதல்வர் அமரீந்தர் சிங், சனிக்கிழமை விபத்து நேரிட்ட இடத்தைப் பார்வையிட்டார்.
 அதைத் தொடர்ந்து, விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களையும், உயிரிழந்தவர்களின் உறவினர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 பின்னர் செய்தியாளர்களிடம் அமரீந்தர் சிங் கூறுகையில், ""இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு, ஜலந்தர் கோட்டாட்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.
 ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 39 பேரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள், பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக பஞ்சாப் மாநிலத்துக்கு வந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ராவணனாக நடித்தவர் சாவு: விபத்தில் உயிரிழந்தவர்களில் ராவணனாக நடித்த தல்பீர் சிங் (20) என்பவரும் ஒருவர்.
 முன்கூட்டியே தகவல் இல்லை- ரயில்வே வாரியம்: இதனிடையே, ரயில் தண்டவாளம் அருகே தசரா விழா நடத்தப்படுவதாக முன்கூட்டியே ரயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை என்று ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வனி லோஹானி கூறினார்.
 எதிர்க்கட்சிகள் கோரிக்கை: இதனிடையே, ரயில் தண்டவாளம் அருகே தசரா விழா நடத்துவதற்கு அனுமதி அளித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிரோமணி அகாலி தளம், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
 வழக்குப் பதிவு: இந்நிலையில், ரயில் விபத்து தொடர்பாக, பெயர் குறிப்பிடாத நபர்கள் மீது ரயில்வே போலீஸ் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com