பாலியல் புகார்: ஆர்.கே.பச்செளரி மீது குற்றச்சாட்டுகள் பதிவு

பாலியல் புகார்: ஆர்.கே.பச்செளரி மீது குற்றச்சாட்டுகள் பதிவு

பாலியல் புகாரில் சிக்கியுள்ள எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தின் (தேரி) முன்னாள் தலைவர் ஆர்.கே.பச்செளரிக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் சனிக்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தின் (தேரி) முன்னாள் தலைவர் ஆர்.கே.பச்செளரிக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் சனிக்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அவை அனைத்தையும் மறுத்த பச்செளரி, இந்த விவகாரத்தில் வழக்கு விசாரணையை விரைவில் நிறைவு செய்யுமாறு வலியுறுத்தினார்.
 "தேரி' அமைப்பில் பணிபுரிந்தபோது தமக்கு பச்செளரி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சக பெண் பணியாளர், காவல் துறையிடம் புகார் கொடுத்தார். அதனடிப்படையில், பச்செளரிக்கு எதிராக, கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யயப்பட்டது. அடுத்த சில தினங்களில் அவர் முன்ஜாமீன் பெற்றார்.
 இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த தில்லி காவல் துறையினர், கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதியன்று 1,400 பக்க அளவிலான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். பச்செளரி தன்னை பின்தொடர்ந்தார்; பாலியல் துன்புறுத்தல் செய்தார்; மிரட்டல் விடுத்தார் என்று அந்தப் பெண் கூறிய குற்றச்சாட்டுகளுககு போதிய ஆதாரம் உள்ளது என்று அந்தக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 அதைத் தொடர்ந்து, துணைக் குற்றப்பத்திரிகை ஒன்றைக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். அதில், பச்செளரிக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே நடைபெற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்கள் குறித்தும், அழிக்கப்பட்ட மின்னஞ்சல்கள் மீட்கப்பட்டது குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.
 அதன் பின்னர், இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பச்செளரிக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே கட்செவி அஞ்சல் வழியே நடைபெற்ற உரையாடல்கள், பரிமாறப்பட்ட குறுந்தகவல்கள் ஆகியவை அவர்களின் செல்லிடப்பேசிகளில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 ஆனால், தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் பச்செளரி மறுத்து வருகிறார்.
 இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சாரு குப்தா குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சனிக்கிழமை அந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது பச்செளரி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், இந்த வழக்கின் விசாரணை நடவடிக்கைகளை விரைவில் நிறைவு செய்யுமாறு வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 4-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com