அமிருதசரஸ் ரயில் விபத்து: பஞ்சாப் அரசு, ரயில்வேக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் நகரில் ரயில் மோதியதில் 61 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பதிலளிக்கக் கோரி பஞ்சாப் அரசுக்கும், ரயில்வே நிர்வாகத்துக்கும் தேசிய


பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் நகரில் ரயில் மோதியதில் 61 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பதிலளிக்கக் கோரி பஞ்சாப் அரசுக்கும், ரயில்வே நிர்வாகத்துக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமிருதசரஸ் நகரில் தசரா விழாவில் பங்கேற்றவர்கள் மீது கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி ரயில் மோதியதில் 61 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். விபத்து நடைபெற்ற இடத்தில் மக்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வீசித் தாக்கி வன்முறையிலும் ஈடுபட்டனர். இதனிடையே, இந்த விவகாரத்தை மனித உரிமைகள்ஆணையம் தானாக முன் வந்து விசாரிக்கிறது.
இதுகுறித்து அந்த ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு பஞ்சாப் மாநில தலைமை செயலருக்கும், ரயில்வே நிர்வாகத்தின் தலைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதுதொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த விபத்து ஒரு கொடூரமான நிகழ்வு. ரயில் தண்டவாளங்களில் மக்கள் அமர்ந்திருந்தது புத்திசாலித்தனமான செயல் இல்லைதான். எனினும், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர் என்பது இதன்மூலம் வெளிப்படையாக தெரிகிறது. விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால் தசரா நிகழ்ச்சியை பார்வையிட வந்த மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர அதிகாரிகள் தவறியுள்ளனர். விழா நடைபெறுவது குறித்து ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. அது உண்மையெனில், அந்த செயல் அதிகாரிகள் பொறுப்பற்ற நடத்தையை வெளிக்காட்டுகிறது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டோரின் உரிமைகள் மீறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு மாநில அரசு அளித்துள்ள இழப்பீட்டுத் தொகை மற்றும் அவர்களுக்கு அளித்து வரும் மருத்துவ சிகிச்சை குறித்த தகவல்களை அரசு தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
முன்னதாக, அந்த பகுதியில் விழா நடைபெறுவது குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதனால் ரயில்வே நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்த முடியாது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிகார் நீதிமன்றத்தில் சித்து மனைவி மீது வழக்கு: அமிருதசரஸில் நடந்த ரயில் விபத்துக்கு, நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கெளர் சித்து, அவரது கடமையை சரியாக செய்யாததே காரணம் என்று பிகார் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் மீது சமூக ஆர்வலர் தமன்னா ஹாஸ்மி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக ஹாஸ்மி தாக்கல் செய்த மனுவில், அமிருதசரஸில் நடைபெற்ற தசரா நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக நவ்ஜோத் கெளர் சித்து பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால்தான் மக்கள்கூட்டம் அலை போல் திரண்டது. அவரது உரையால்தான் மக்கள் கூட்டம் சிதறி ரயில் தண்டவாளங்களில் நின்றது. இந்த விபத்துக்கு அந்த நிகழ்ச்சியை நடத்திய ஒருங்கிணைப்பாளர்களும், கெளர் சித்துவும்தான் காரணம். நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீஸார் அனைவரும் கெளர் சித்துவுக்கு பாதுகாப்பு அளிப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டியதாயிற்று. மருத்துவராக இருக்கும் கெளர், பாதிக்கப்பட்டோருக்கு உதவிபுரியாது அங்கிருந்து சென்றுவிட்டார். விபத்து நடந்த போது தான் அங்கு இல்லை என்றும் பொய் கூறி வருகிறார். இந்த வழக்கை நீதிமன்றம் கவனத்தில் கொண்டு குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். 
இந்த விபத்தில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com