கேரளத்திடம் மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

கேரள மாநில அமைச்சர்கள், வெள்ள நிவாரணத்துக்காக நிதி திரட்ட வெளிநாடுகளுக்குச் செல்ல மத்திய அரசு மறுத்து வருவது முதலான பல்வேறு விவகாரங்களில், மாநிலத்திடம்
கேரளத்திடம் மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது: பினராயி விஜயன் குற்றச்சாட்டு


கேரள மாநில அமைச்சர்கள், வெள்ள நிவாரணத்துக்காக நிதி திரட்ட வெளிநாடுகளுக்குச் செல்ல மத்திய அரசு மறுத்து வருவது முதலான பல்வேறு விவகாரங்களில், மாநிலத்திடம் மத்திய அரசு பாகுபாடு காட்டி வருகிறது என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு நிதி திரட்டுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 5 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் பினராயி விஜயன், அதனை முடித்துக்கொண்டு திங்கள்கிழமை கேரளத்தை வந்தடைந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
கேரளத்துக்கு மேலும் நிதிகளைத் திரட்ட இந்தச் சுற்றுப்பயணம் பேருதவி புரிந்தது. மற்ற நாடுகள் அளிக்கும் நிதிகளைப் பெற்றுக்கொள்ள அனுமதித்தால், கேரளத்தின் சீரமைப்புப் பணிகளுக்கு அது பெரும் உதவியாக இருக்கும். ஆனால், அத்தகைய நிதிகளைப் பெறுவதற்கு மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. மேலும், நிதி திரட்டுவதற்காக மாநில அமைச்சர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மாநில அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மாநில அரசுகள் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு மத்திய அரசு தடையாக இருக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
பின்னணி: கடந்த ஆகஸ்டு மாதம், கேரளத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 493 பேர் உயிரிழந்தனர். மேலும், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் முற்றிலும் சீர்குலைந்து போயின. ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கேரளத்துக்கு நிதி வழங்க முன்வந்த நிலையில், மத்திய அரசு அதனை ஏற்க மறுத்தது.
இந்நிலையில், நிவாரணப் பணிகளுக்காக நிதி திரட்டும் நோக்கில், பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மாநில அமைச்சர்கள் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தனர். 
பினராயி விஜயன் மற்றும் ஒரு சில அமைச்சர்கள் மட்டும் பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்த மத்திய அரசு, பெரும்பாலான அமைச்சர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுத்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com