சிபிஐ உயரதிகாரிகள் ஆஜராக பிரதமர் உத்தரவு: மோதல் விவகாரம்

நாட்டின் உயரிய புலனாய்வுக்குழு அமைப்பான சிபிஐ-க்குள் இரு உயரதிகாரிகள் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா,
சிபிஐ உயரதிகாரிகள் ஆஜராக பிரதமர் உத்தரவு: மோதல் விவகாரம்


நாட்டின் உயரிய புலனாய்வுக்குழு அமைப்பான சிபிஐ-க்குள் இரு உயரதிகாரிகள் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரையும் நேரில் ஆஜராகுமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தில்லியில் பிரதமர் அலுவலக மூத்த அதிகாரி கூறுகையில், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையேயான மோதல் விவகாரத்தில் மோடி தற்போது தலையிட்டுள்ளார். சிபிஐ அமைப்பில் தற்போது நடக்கும் சம்பவங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்வதற்கு, அதன் இயக்குநர், சிறப்பு இயக்குநர் ஆகியோரை தம்மை வந்து நேரில் சந்திக்கும்படி மோடி உத்தரவிட்டுள்ளார் என்றார்.
சிபிஐ துணை கண்காணிப்பாளர் கைது: இதனிடையே, வழக்கில் இருந்து விடுவிக்க தொழிலதிபரிடம் ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், சிபிஐ அமைப்பின் துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமார் திங்கள்கிழமை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை செய்த விவகாரத்தில் இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷிக்கு எதிரான வழக்கை ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிபிஐ சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தியது. இந்த குழுவில் சிபிஐ துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமார் இடம்பெற்றிருந்தார். மொயின் குரேஷி தொடர்பான வழக்கில் ஹைதராபாதை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா என்பவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதனிடையே, மொயின் குரேஷியின் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த இடைத் தரகர் மனோஜ் பிரசாத் என்பவரை சிபிஐ கைது செய்து விசாரித்தது. அப்போது அவர், மொயின் குரேஷி தொடர்பான வழக்கில் இருந்து சதீஷ் சனாவை விடுவிப்பதற்கு அஸ்தானாவுக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதனடிப்படையில், சனாவை வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின்கீழ் அஸ்தானா, தேவேந்தர் குமார் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. முன்னதாக, சனாவை வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியிருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் அஸ்தானா கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்திருந்தார். தற்போது அதே லஞ்ச குற்றச்சாட்டின்கீழ் அஸ்தானா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாரை சிபிஐ திங்கள்கிழமை அதிரடியாக கைது செய்துள்ளது.


இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:
மொயின் குரேஷி தொடர்பான வழக்கில் சனாவின் வாக்குமூலத்தை அஸ்தானா தலைமையிலான குழு கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குமூலத்தில் சனா, தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான சி.எம். ரமேஷை கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேசினேன். இதைத் தொடர்ந்து அவர் சிபிஐ இயக்குநரை (அலோக் வர்மா) தொடர்பு கொண்டு பேசினார். பின்னர், மொயின் குரேஷி தொடர்பான வழக்கில் எனக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட மாட்டாது என ரமேஷ் வாக்குறுதி அளித்தார். அவர் தெரிவித்தது போலவே, சிபிஐ அமைப்பிடம் இருந்து எனக்கு பின்னர் சம்மன் அனுப்பப்படவில்லை. இதனால் எனக்கு எதிரான வழக்கை சிபிஐ முடித்து கொண்டு விட்டதாக கருதினேன் எனத் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாக்குமூலம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியபோது, அஸ்தானா தலைமையிலான குழுவிடம் வாக்குமூலம் அளித்ததாக தெரிவிக்கப்பட்ட தேதியில், ஹைதராபாதில் சனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீது அஸ்தானா புகார் தெரிவிக்க வசதியாக, சனா அளித்தது போன்ற பொய்யான வாக்குமூலத்தை தேவேந்தர் குமார் தயாரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, பொய்யான வாக்குமூலத்தை தயாரித்தது தொடர்பாக துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாரை சிபிஐ திங்கள்கிழமை கைது செய்தது. மேலும் தில்லியில் உள்ள அவரது வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிபிஐ சோதனை நடத்தியது. அப்போது செல்லிடப் பேசிகள், ஐ பேட் போன்றவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் அஸ்தானா தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த பிற அதிகாரிகளுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராகேஷ் அஸ்தானா, குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவகாரம், விஜய் மல்லையா விவகாரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு விசாரணை குழுவுக்கு அஸ்தானாவே தலைமை வகிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com