தெலங்கானா வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள்: தேர்தல் ஆணையரிடம் காங்கிரஸ், பாஜக புகார்

தெலங்கானா வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத்திடம் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.


தெலங்கானா வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத்திடம் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.
தெலங்கானா மாநில சட்டப் பேரவைக்கு வரும் டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு, தெலங்கானாவுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராவத் 3 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார்.
ஹைதராபாதில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் அவர் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தெலங்கானாவை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட 9 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் சசிதர் ரெட்டி, பாஜக சார்பில் மூத்த தலைவர் இந்திரசேனா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சசிதர் ரெட்டி பேசுகையில், வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் உள்ளன; இதுதொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் இந்தத் தேர்தலானது நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் நடைபெறும் தேர்தலாகி விட்டது. அப்படியிருக்கையில், குளறுபடிகளை களையாமல், தேர்தலை தொடர்ந்து நடத்துவது என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்தால், அது ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்ட தீங்கு ஆகும். காங்கிரஸ் குழு நடத்திய ஆய்வில், வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 12ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 68 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர் என்றார்.
பாஜக மூத்த தலைவர் இந்திரசேனா ரெட்டி பேசுகையில், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து எங்கள் கட்சி புகார் அளித்துள்ளது. தேர்தலில் பணநடமாட்டத்தை தடுப்பதற்கு ஆம்புலன்ஸ், ஏடிஎம்.மில் பணம் நிரப்ப பயன்படும் வாகனங்கள் ஆகியவற்றையும் சோதனைக்கு உள்படுத்த வேண்டும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெலங்கானா மாநில செயலாளர் சதா வெங்கட் ரெட்டி பேசுகையில், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடப்பதை உறுதி செய்ய சட்டவிரோத பண நடமாட்டத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்றார்.
தெலங்கானா சட்டப் பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அந்த மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் ஆலோசனை நடத்துவது இதுவே முதல்முறையாகும். ஒ.பி. ராவத் தலைமையில் 11 பேர் கொண்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழுவும் தெலங்கானாவுக்கு வந்துள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் அக்குழுவினர் செவ்வாய்க்கிழமை (அக்.23) ஆலோசனை நடத்தவுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com