நவீன சாணக்கியர் அமித் ஷா: மத்திய அமைச்சர் புகழாரம்

இன்றைய நவீன உலகின் சாணக்கியர் (அரசியல் நுணுக்கங்களில் கை தேர்ந்தவர்) பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத நாயக் புகழாரம்
நவீன சாணக்கியர் அமித் ஷா: மத்திய அமைச்சர் புகழாரம்


இன்றைய நவீன உலகின் சாணக்கியர் (அரசியல் நுணுக்கங்களில் கை தேர்ந்தவர்) பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத நாயக் புகழாரம் சூட்டியுள்ளார். அமித் ஷாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு இவ்வாறு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அமித் ஷா திங்கள்கிழமை (அக்டோபர் 22) 54 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்களுக்கும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மோடி சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்டுள்ள பதிவில், அமித் ஷாவின் தலைமையில் பாஜக தேசிய அளவில் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. அவரது கடின உழைப்பு, சிந்தனை, செயல் திறன் ஆகியவை பாஜகவின் மிகப்பெரிய சொத்து. அவர் நல்ல உடல் நலனுடன், நீண்ட ஆயுள் பெற்று வாழ அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அமைச்சர் ஸ்ரீபாத நாயக் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், நவீன உலகின் சாணக்கியர் அமித் ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். எங்களுடைய பிரதான வழிகாட்டியாக இருந்து வெற்றிகரமாக வழி நடத்திச் செல்கிறார். அவரது கொள்கைப் பிடிப்பும், கட்சித் தொண்டர்களிடையே கொண்டுள்ள நேரடித் தொடர்பும்தான் அவரை தனித்தன்மையுடன் விளங்கச் செய்கிறது என்று கூறியுள்ளார்.
பாஜக முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் அரசியலில் வெற்றிகரமாகத் திகழ்வதற்கு அமித் ஷாவின் திட்டமிட்ட செயல்பாடுகள்தான் முக்கியக் காரணம் என்றால் அது மிகையாகாது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற பிறகு, பாஜகவின் தேசியத் தலைவர் பொறுப்பை அமித் ஷா ஏற்றார். 
அதன் பிறகு உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் வெற்றிக்கு அவரது தேர்தல் உத்திகளே முக்கியக் காரணமாக அமைந்தன. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 25 ஆண்டுகள் தொடர்ந்த இடதுசாரி அரசை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடித்தது. இது தவிர அஸ்ஸாம், உத்தரகண்ட், கோவா, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர அமித் ஷாவின் அரசியல் சாதுர்யமே முக்கியக் காரணமாக அமைந்தது. எனவேதான் அவரை நவீன சாணக்கியர் என்று மத்திய அமைச்சர் ஸ்ரீபாத நாயக் புகழ்ந்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com