அமைதிப் பேச்சு: 2019 தேர்தலுக்குப் பிறகு இந்தியாவுக்கு மீண்டும் அழைப்பு

வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமைதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு, இந்தியாவுக்கு மீண்டும்
அமைதிப் பேச்சு: 2019 தேர்தலுக்குப் பிறகு இந்தியாவுக்கு மீண்டும் அழைப்பு


வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமைதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு, இந்தியாவுக்கு மீண்டும் அழைப்பு விடுப்பேன் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலீடு தொடர்பான நிகழ்ச்சியில், இதுகுறித்து இம்ரான் கான் பேசியதாவது:
அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியை பேணவே பாகிஸ்தான் விரும்புகிறது. குறிப்பாக, பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை ஆகிய நோக்கங்களுக்காக இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் அமைதியை கடைப்பிடிக்கவே பாகிஸ்தான் விரும்புகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் அமைதி ஏற்பட்டால், அது சம்பந்தப்பட்ட இருநாடுகளும் மக்கள் நல மேம்பாட்டுக்கு மூலவளங்களை பயன்படுத்த உதவியாக இருக்கும். இரு நாடுகள் இடையே ஆயுத போட்டிக்கு வழிவகுக்காது. 
இதேபோல், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்பட்டால், மத்திய ஆசிய நாடுகளை தனது பொருளாதார, வர்த்தக காரணிகளுக்கு எளிதாக தொடர்பு கொள்ள பாகிஸ்தானுக்கு உதவும்.
மேற்கண்ட காரணங்களை மனதில் கொண்டே, இந்தியாவுக்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு நான் அழைப்பு விடுத்தேன். ஆனால் எனது அழைப்பை இந்தியா நிராகரித்து விட்டது. 
இதற்கு இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களின்போது பாகிஸ்தான் விவகாரம் எழுப்பப்படும் என்பதே காரணமாகும்.
ஆதலால், இந்தியாவில் வரும் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிந்ததும், அமைதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மீண்டும் அழைப்பு விடுப்பேன் என்றார் இம்ரான் கான். பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, அந்நாட்டு பிரதமராக இம்ரான் கான் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக இம்ரான் கான் கடிதம் எழுதினார். 
இந்த அழைப்பை ஏற்று, நியூயார்க்கில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசுவார் என இந்தியா அறிவித்தது. இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் 3 போலீஸாரை கடத்திச் சென்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர். எல்லையில் பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் பாகிஸ்தான் எல்லைக் காவல்படையினரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த 2 சம்பவங்களைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com